பொது செய்தி

தமிழ்நாடு

விளை பொருட்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம்

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் உள்ள ஒழுங்கு முறை வேளாண் விற்பனைக் கூடத்தில், விளை பொருட்களுக்கு ஆன்லைன் பண பரிவர்த்தனை தாமதமாவதால் விவசாயிகள் பல மணிநேரம் காத்திருந்து அவதிப்படும் நிலை உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை நகர பகுதியைச் சுற்றிலும் கிள்ளனுார், காட்டுநெமிலி, பாண்டூர், மூலசமுத்திரம், பூ.கொணலவாடி, காம்பட்டு, செங்குறிச்சி, நைனாங்குப்பம், நகர், மாம்பாக்கம், நெமிலி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களில் பெரும்பாலும் விவசாயத்தை மட்டுமே தொழிலாக நம்பி செய்து வருகின்றனர். இங்கு, நெல், வேர்க்கடலை, கம்பு, ராகி, உளுந்து, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் விவசாய விளை பொருட்கள் அனைத்தும், உளுந்துார்பேட்டை நகர பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் கீழ் இயங்கும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இங்கு, எடை போட்டு, அன்றைய விலைக்கு மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் செய்து வந்தனர்.விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களுக்குண்டான பணத்தை விவசாயிகளுக்கு, கமிட்டி அலுவலர்கள் உடனடியாக வழங்கி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்-லைன் முறையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது.

இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டதில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த விளை பொருட்களுக்கான தொகை சரியாக கணக்கில் சேராத நிலை நீடித்தது. இதனால், விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் அதே நிலையே தொடர்கிறது. பணம் வந்து சேரவில்லை என அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்க காத்திருந்தாலும் அதிகாரிகள் சரியான பதில் கூறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு அவர்களால் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை என்ற நிலை ஒருபுறம் இருந்தாலும், விளைவித்த பொருட்களுக்கு பணம் தருவதிலும் தாமதம் ஏற்படுவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த நிலையை போக்க, ஒழுங்கு முறை விற்பனைக் கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X