சூரிய சக்தி பம்பு செட்டுகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூரிய சக்தி பம்பு செட்டுகள்

Added : ஜூன் 11, 2020
Share

விழுப்புரம் : விவசாயிகளுக்கு மின்கட்டமைப்பு சாராத தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைத்துக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;வேளாண் நீர் பாசனத்திற்கு தேவையான எரிசக்தியினை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2020--21ம் ஆண்டு முதல் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்து கொடுத்து வருகிறது.சூரிய சக்தி பம்பு செட்டுகள் மூலம் மின் இணைப்பு தேவையின்றி பகலில் 8:00 மணிநேரம் பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம் பெறமுடியும். மத்திய அரசு பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 17,500 மின் கட்டமைப்பு சாராத தனித்தியங்கும் சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை வேளாண் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

இத்திட்டம் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டம் மத்திய அரசின் 30 சதவீதம், தமிழக அரசின் 40 சதவீத மானியம் என 70 சதவீத மானியத்துடனும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையிலான 'ஏசி' மற்றும் 'டிசி' மோட்டார் பம்பு செட்டுகளுக்கான விலை நிர்ணயம் செய்தல் மற்றும் நிறுவனங்களை அங்கீகரித்தல் ஆகியவை மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், விவரங்களுக்கு விழுப்புரம், வானுார் மற்றும் விக்கிரவாண்டி தாலுகா விவசாயிகள் விழுப்புரம் வழுதரெட்டி பெரியார் தெருவில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையோ அல்லது 04146 258951 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோன்று, திண்டிவனம், செஞ்சி மற்றும் மேல்மலையனுார் தாலுகா விவசாயிகள் திண்டிவனம் மானுார் மரக்காணம் ரோடு டான்வா குடியிருப்பு வளாகம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையோ அல்லது 04146 250486 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X