கல்வி ஒன்றே போதும்; குழந்தைகளை காப்போம்:குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி ஒன்றே போதும்; குழந்தைகளை காப்போம்:குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று

Added : ஜூன் 12, 2020
Share

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் நோக்கத்தில் ஐ.நா., சார்பில் ஆண்டு தோறும் ஜூன் 12ல் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

'குழந்தை தொழிலாளர் மீதான நெருக்கடியின் தாக்கம்' என்பதே இந்தாண்டு கருப்பொருள். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு தொழிலாளர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொருளாதார மந்தத்தால் ஏழை சிறுவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

பலரை குழந்தை தொழிலாளர் முறைக்கு தள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடினமான வேலைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களையே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கல்விதான் கற்க வேண்டும் என ஐ.நா.,வின் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமைப்பு கூறுகிறது.

தொழில் மாவட்டமான விருதுநகரில் 1987 ல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் சிறப்பு பயிற்சி மையங்களின் சேர்க்கப்பட்டனர். தற்போது 18 சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்படுகிறது. இங்கு பயின்ற பின் அரசு, தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டு அரசு, தனியார் வேலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். 2020 ஜனவரி முதல் மே வரை 324 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். 95 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு நிவாரணம்

மத்திய அரசு பென்சில் அமைப்பு மூலம் தனியாக சிறப்பு குழு அமைத்து குழந்தை தொழிலாளர் குறித்து கண்காணித்து வருகிறது. பொதுமக்களும் pencil.gov.in என்ற இணையத்தில் புகார்களை பதிவு செய்யலாம். ஊரடங்கு நேரத்தில் வறுமை காரணமாக குழந்தைகள் வேலைக்கு சென்று விட கூடாது என்பதை கருத்தில் கொண்டு 324 குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் தொண்டு அமைப்புகள் உதவியோடு வழங்கப்பட்டது.

திருத்தங்கல் மளிகை கடையில் 2 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். கடை உரிமையாளரிடம் இருந்தே அபராத தொகை தலா ரூ.15 ஆயிரம் பெறப்பட்டு இழப்பீடாக அச்சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது. இது தமிழகத்தில் முதன்முறை.

நாராயணசாமி,
திட்ட இயக்குனர், குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு திட்டம், விருதுநகர்

சிறப்பான எதிர்காலம்

திருத்தங்கல்லை சேர்ந்தவர் ராமலெட்சுமி. இவர் மூன்றாம் வகுப்பு வரை படித்த பின் குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் இருந்த படியே பட்டாசு தொழிலில் ஈடுபட்டார். உறவினர் அறிவுரை படி சிவகாசியில் உள்ள குழந்தை தொழிலாளர்கள் பள்ளியில் படித்தார். பட்ட படிப்பு முடித்த பின் அரசு போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது மதுரை சேடப்பட்டி ஒன்றிய உதவியாளராக பணிபுரிகிறார்.

அவர் கூறியதாவது: குழந்தை தொழிலாளர்களாக யாருமே இருக்க கூடாது என்பது தான் எனது ஆசை. அரசு பணியில் சேர பட்ட படிப்பு போதுமானது. போட்டி தேர்வுக்கு தயாராகி எளிதில் அரசு பணியில் சேர்ந்து குடும்ப வறுமையை போக்கி விடலாம். படிப்பு ஒன்று மட்டும் தான் நம் வாழ்வை முன்னேற்றும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X