தமிழ்நாடு

'கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சமூக பரவல் இல்லை': சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

சேலம்: ''கொரோனா பாதிப்பில், தமிழகத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை,'' என, முதல்வர் பழனிசாமி பேட்டியளித்தார்.
சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்து, முதல்வர் பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பாதிப்பால், அரசு மருத்துவமனையில் இறப்போரின் எண்ணிக்கை, அரசுக்கு தெரியும். தனியார் மருத்துவமனைகளில் பெறப்படும் தகவல்களையும் ஒருங்கிணைத்து அறிவிக்கப்படுகிறது. இதில், எதையும் மறைக்க முடியாது. கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தால், அது அனைவருக்கும் தெரிந்துவிடும். இதை மறைப்பதால், அரசுக்கு எந்த நன்மையும் இல்லை. தினமும் சுகாதாரத்துறை மூலம், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோர், குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோரின் விபரங்களை, வெளிப்படையாக அறிவிக்கிறோம்.

6 லட்சம் பேர்: இதுவரை, ஆறு லட்சத்து, 9,856 பேருக்கு, தொற்று பரிசோதனை செய்துள்ளோம். இந்தியாவில், அதிக பரிசோதனை மேற்கொண்ட மாநிலம் தமிழகம் தான். ஏற்கனவே, கேன்சர், சர்க்கரை, இதய, சிறுநீரக நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் இறப்புதான் அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைவு. அரசு, தனியார் மருத்துவமனைகளில், ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். சேலத்தில் மட்டும், 2,000 பேர் சிகிச்சை பெறக்கூடிய அளவு, படுக்கை வசதிகள் உள்ளன. மேலும், 5,000 படுக்கை ஏற்பாடு செய்ய, தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில், தமிழகத்தில்தான் அதிகமாக, 3,384 வென்டிலேட்டர்கள் உள்ளன.

சமூக பரவலா? சமூக பரவல் என்றால், அனைவருக்கும் தொற்று ஏற்படுவது. அப்படி ஏற்பட்டிருந்தால், நாம் இங்கு ஒன்றாக இருக்க முடியாது. பாதிக்கப்பட்டோர், அவர்கள் தொடர்பில் இருந்தோர் என, அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. சமூக பரவல் ஏற்படவில்லை. சென்னை மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரம். குறுகலான சிறு தெருக்கள் அடங்கியது. இதனால், அங்கு எளிதாக பரவுகிறது. அனைத்து மாவட்டங்களில், பல துறையினரும் ஒருங்கிணைந்து, நோய் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம். இதை மக்கள் உணர்ந்து, சமூக இடைவெளி, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்துள்ள தளர்வு போதுமானது. கட்டுப்பாட்டுக்குள் வைக்கவே ஊரடங்கு உள்ளது. கட்டுப்பாடில்லாமல் போனால், தொற்று வேகமாக பரவிவிடும். பெங்களூரில் இருந்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக சேலம் வருகின்றனர். அவர்களை அனுமதித்தால், இது சமூக தொற்றாக மாறிவிடும். அதனால், அங்கே பரிசோதனை செய்து, அடுத்த மாவட்டத்துக்கு அனுமதிக்கின்றனர். இப்படி மண்டலம் வாரியாக பிரித்து, ஆங்காங்கே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுதான், அந்தந்த மாவட்டங்களில் அனுமதிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், முடிவெடுத்து செய்கிறோம். அதனால், நோய் அறிகுறி உள்ளோர், அருகிலுள்ள மருத்துவமனையில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, சிகிச்சை பெற்றால், நோயில் இருந்து விடுபடலாம். இதற்கு, ஒரே மருந்து, ஒவ்வொருவரும் தங்கள் கடமையை உணர்ந்து, அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X