சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத் துறையின் செயலராக ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் பீலா ராஜேஷ் செயல்பட்டுவந்தார். இந்த நிலையில், தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் அந்தத் துறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, வர்த்தக வரி மற்றும் பதிவுத் துறையின் செயலராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் புதிய சுகாதார துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் அவர் தொடர்ந்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீலா ராஜேஷ் சுகாதார துறைச்செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ராதாகிருஷ்ணன் தான் சுகாதாரத் துறைச் செயலராக 2012 - 2019 ஆண்டுகள் வரை பதவி வகித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE