மதுப்பழக்கம் உள்ளவர்களின் அதிகரிப்பு காரணமாக, மதுவின் தேவை வரம்பு மீறிப் போய்விட்டது. அந்த வரம்பு மீறிய தேவையைப் பயன்படுத்தி, பணம் சம்பாதிக்க நினைக்கும் கள்ளச் சாராய வியாபாரிகள், மது விலக்குக்காக கழுகு போல் காத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும், ஆளும் கட்சியின் கீழ்மட்ட உள்ளூர் தலைவர்கள் ஆதரவில்தான், கள்ளச் சாராயம் விற்கப்படும். சில ஊர்களில், ஊர் பொதுவில், ரகசியமாக ஏலம் விட்டு சாராயம் காய்ச்சி விற்க அனுமதி கொடுத்து விடுவர். காவல்துறையினர், மதுவிலக்கு வேட்டைக்கு சென்றால், பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைக்காது.
உற்சாக பானம்
மாறாக சாராய வியாபாரிக்கு ஆதரவாகக் கூடி, கைது செய்ய விடாமல் தடுப்பர். நாம், 'ரெய்டு'க்கு போகும் தகவல், அவர்களுக்கு முன்பாகவே கிடைத்து, ஓடிவிடுவர். ஒருவர்கூட வீட்டில் இருக்க மாட்டார்கள்; சாராயமும் மறைக்கப்பட்டு விடும். கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவது, பெரும்பாலும் பெண்கள்தான். பாண்டிச்சேரி மாநில எல்லையில் காரைக்காலில் தங்கி மது அருந்தி வரும், 'உற்சாக பான'ப் பிரியர்கள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனமில்லாமல், சில பாட்டில்களை உடைக்குள் பதுக்கி வருவர். அதற்கென்றே பிரத்யேகமாக அந்த பாட்டில்கள், சப்பையாக, சிறிது வளைவுடன் வடிவமைக்கப்படிருக்கும். முஸ்லிம் பெண்கள் போல பர்தா அணிந்து, உள்ளாடைகளில் சிறுசிறு பைகளாகத் தைத்து, அதில் செறுகி வைத்து, கடத்தி வருவர்.
நள்ளிரவுக்கு மேல், மது பாட்டில்களை, மொத்த வியாபாரிகளே நன்றாக, 'பேக்' செய்து, இரு பக்க தோளிலும் இரண்டு, தலையில் ஒன்றுமாக சுமந்து செல்வதற்கு ஏதுவாகக் கொடுப்பர். ஒரே நேரத்தில் பத்து பன்னிரண்டு பேர், வயல் வரப்புகளில் எல்லையைத் தாண்டி, மிக வேகமாக கால்நடையாக வருவர். அதற்கான தெம்பையும், துணிவையும், அவர்கள் அருந்தி இருக்கும், 'உற்சாக பானம்' கொடுத்துக் கொண்டிருக்கும். முன்னதாக, ஒரு பைலட் ஆசாமி, கையில் ஆயுதத்துடன், சாலையின் குறுக்கே உள்ள ஒரு ஆற்றுப் பாலத்தைக் கடந்து நின்று, சுற்றும் முற்றும் பார்த்து, தன் கையிலுள்ள, 'டார்ச்' விளக்கு மூலம் சிக்னல் கொடுப்பார். சிக்னல் கிடைத்ததும், கடத்தும் ஆட்கள், சாலைக்கு வருவர். மறைவிலிருந்து வெளிப்படும் நாங்கள், துப்பாக்கி காட்டி சுற்றி வளைத்துப் பிடிப்போம். இந்த வேட்டை, அவ்வளவு எளிதில் முடிந்து விடாது.போலீசாருக்கு, காயம் ஏற்படுவதும் உண்டு.இன்னொரு வேடிக்கை...கடற்கரை ஓரமாகவே வரும் கடத்தல் கும்பலைப் பிடிக்க, நிலவொளி வெளிச்சத்தில் பனமர
நிழலில் போலீசார் பதுங்கியிருப்போம். அந்த நள்ளிரவு நேரத்திலும், அந்தப் பகுதியிலுள்ள ஒரு பறவையினம் - அதற்கு ஆள் காட்டிக் குருவி என்றே நம் மக்கள் பெயர் வைத்திருந்தனர் - ஆள் அரவத்தைக் கண்டால், குரல் எழுப்ப ஆரம்பித்து விடும்.
பெரிய சவால்
அதனால் அது குரல் அடங்கும் அளவுக்கு, எங்களை மறைத்துக் கொள்ள, மிக முன்னதாகவே சென்று விடுவோம்.கடத்தல்காரர்களின் யுக்தி பல நேரங்களில் நம்மை பிரமிக்க வைக்கும். சைக்கிளில், பால்கேன் கொண்டு வருவர்; மேலே மூடியைத் திறந்து பார்த்தால் பால் இருக்கும். கீழே, குழாயைத் திறந்தாலும் பால் வரும். ஆனால் நடுவில் தடுப்பு அமைத்து, மதுபாட்டில்களை மறைத்து வைத்திருப்பர். ஒரு முறை, முக்கிய நபர்கள் மட்டுமே உபயோகிக்கும் படகுக் காரில் தேசியக் கொடியை பறக்க விட்டபடியே, 'உற்சாக பான' பாட்டில்களைக் கடத்தினர். உரிய நேரத்தில் தகவல் கிடைத்ததால் துரத்திப் பிடித்து பாட்டில்களைக் கைப்பற்றினோம்.கள்ளச் சாராயம், மிக மோசமான சூழலில், கொஞ்சமும் சுகாதாரமில்லாத வகையில் தயாரிக்கப்படும் மது. காட்டுப் பகுதியில், துாரத்தில் காவல்துறையினர் வந்தாலே தெரிந்து தப்பித்துக் கொள்ளும் விதத்தில், அந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பர். சாராயம் தயாரிக்கப் பயன்படும் ஊரல் எனப்படும் கலவை, வெல்லம், கடுக்காய், பட்டை உட்பட பலபொருட்களைப் போட்டு நொதிக்கச் செய்யும் முறையில், மறைவான இடத்தில், தரையில் புதைக்கப்பட்டிருக்கும். அந்த இடம், பெரும்பாலும், ஊர் மக்கள் கழிப்பிடமாவே இருக்கும். அவற்றைத் தேடி கண்டுபிடிப்பது, காவல் துறையினருக்குப் பெரிய சவால்.
இந்த சாராய ஊரல் தயாரிக்கப்படும் விதத்தையும், அதில் போட்டியின் காரணமாக, போதையை அதிகரிக்க அவர்கள் கலக்கும், ரசாயன பொருட்களையும் பார்த்தால், குடிகாரர்களே குடியை விட்டுவிடுவர்.கள்ளச் சாராயத்தை மிகக்குறைந்த அளவில், 5 லிட்டர் கேனில் கூலிக்கு விற்றவர்கள், மிகப் பெரிய கடத்தல் வியாபாரியாகவும், தாதாவாகவும் உருவெடுத்து, லட்சக்கணக்கில் பணம் சேர்த்து, அரசியல் பிரமுகர்களாகவும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்களாகவும் வளர்ந்து விட்டதை பார்க்கிறோம்.நேர்மையற்ற, திறமையற்ற, பின்னணியில் இருக்கும் அரசில்வாதிகளைப் பகைத்துக் கொள்ளும் துணிவு இல்லாத காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தான் இதற்கு காரணம். இந்த விஷயத்தில் சில இடங்களில் எதிர்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடில்லாமல் ஒற்றுமையாக நடந்து கொள்வர். எதிர்ப்பு தெரிவிக்க ஆளில்லாமல், துணிச்சலான அதிகாரி தலையிடும்வரை, வியாபாரம் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கும்.இன்று சென்னையைச் சுற்றி உயர்ந்து நிற்கும் கட்டடங்களுடன், உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் குடியிருக்கும் பகுதியெல்லாம், எண்பதுகளில் நாங்கள் சாராய ஊரல் பேரல்களைத் தோண்டியெடுத்த இடங்கள் தான். அந்தப் பகுதியில் வசித்த பலர், நிலங்களின் விலையேற்றம் காரணமாக தங்கள் நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்று, நல்ல நிலைக்கு உயர்ந்து, கண்ணியமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
ஒருங்கிணைப்பு விருந்து
இது போன்ற சூழலில்தான், ஆளும் அரசு, அதிகாரிகளைக் கலந்தாலோசித்து, கள்ளச் சாராய சாவு, தனி ஒருவரிடம் குவியும் அபிரிதமான சொத்து, அதன் காரணமாக தலைதூக்கும் வன்முறை ஆகியவற்றைத் தடுப்பதற்காக, மலிவு விலை மது விற்பனையைக் கொண்டு வந்தது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அந்நிய மதுவகை, முறையான கலப்பு விகிதத்தில் சுகாதார முறைப்படி, உரிய மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டு, தணிக்கைக்கு பிறகு விற்பனைக்கு அனுப்பப்படுவது. தொடர்ந்து அருந்தும்போது, மதுவிற்கே உரிய தீங்கு அதிலும் இருக்கிறது என்றாலும், கள்ளச்சாராயத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளும், உடனடி ஆபத்தும் இல்லை என்பது ஒரு ஆறுதல். மதுப் பிரியர்கள் என்றவுடன், வேலை ஏதுமில்லாமல், எப்போதும் குடிபோதையில் தன்னை அழித்துக் கொள்பவர்களையும், தவறு செய்வதற்காக மது போதையை வலிய ஏற்படுத்திக் கொள்பவர்களையும், நினவில் வைத்துப் பேசிக்
கொண்டிருக்கிறோம். இன்றும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் ஒருங்கிணைப்பு விருந்துகளில், மது பயன்படுத்தப்படுகிறது. தாங்கள் செய்யும் தொழிலின் கடுமை மற்றும் பணியின் தன்மை காரணமாக, மதுவை அருந்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களும் உண்டு; நாகரிகம் கருதி அது பற்றி இங்கு குறிப்பிடுவதைத் தவிர்க்கிறேன்.மிகக் குறுகிய காலத்தில் கருத்தாழமிக்க பாடலை எழுத ஒரு கவியரசுக்கு, மது தேவைப்பட்டதையும், நடிப்பில் தன்னிகரில்லா முத்திரை பதித்தவர் கூட உணர்ச்சி பூர்வமான காட்சிக்கு முன், மது அருந்துவார் என்றும் கூறப்பட்டது.மிகத் திறமையான, தன்னுடைய ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை தலைதுாக்காமல், ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு அதிகாரி, வழக்கு நாட்குறிப்பு எழுதும் பணி தேங்கி விட்டால், சிறிதளவு மது அருந்திவிட்டு, இரவு முழுவதும் கண்விழித்து, ஒரே மூச்சில் எழுதி முடித்து விடுவார். அவருடைய குறிப்புகளில், யாரும் குறை கண்டுபிடிக்க முடியாது. புலன் விசாரணை பற்றி, அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்.இவையெல்லாம் விதிவிலக்குகள்.எல்லையை மீறாத எதுவும், தொல்லையாக கருதப்படுவதில்லை.இங்கு மதுவிலக்கு பற்றி நன்கு தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். எந்த அரசியல் கட்சித் தலைவராவது அல்லது இயக்கங்களுக்கு பொறுப்பேற்று மதுவிலக்கை ஆதரித்து குரல் கொடுப்பவராவது, 'மதுப் பழக்கம் உள்ளவர்கள், என்னுடைய கட்சியில் அல்லது இயக்கத்தில் சேர வேண்டாம்; சேர்க்க மாட்டேன்' என்று அறிவிப்பாரா? அதற்குத் துணிவிருக்கிறதா?
வெற்றி கிடைக்கும்
குடிகாரர்கள் இல்லாத குடும்பமே கிடையாது என்று சொல்ல முடியாது; எவ்வளவோ குடும்பங்கள் இருக்கின்றன. திருத்தப்பட வேண்டிய நிலையில், ஆபத்தான குடிகாரர்களாக, நிறைய பேர் இருக்கின்றனர். ஒரு பாசமிக்க தாய், அன்பான மனைவி, பாசத்துக்கு பாத்திரமான மகள் கொண்ட ஒருவர், நல்ல மனநிலையில் இருக்கும்போது, மதுவை நிறுத்தும் முயற்சி எடுத்தால், அதற்கு நிச்சயமாக, மிகப் பெரிய சதவீதத்தில் வெற்றி கிடைக்கும். மதுவின் தேவை குறைந்தால், மதுக்கடைகள் மூடப்படும். அது அரசு கடையாக இருந்தாலும் சரி; தனியாரின் கள்ளச் சாராயமாக இருந்தாலும் சரி. எரிவதை அணைக்காமல், கொதிப்பதை ஊதி அடக்கப் பார்ப்பது, சரியானதும், உண்மையானதுமான முயற்சிஅல்ல! மா.கருணாநிதி காவல் துறை கண்காணிப்பாளர்- ஓய்வு தொடர்புக்கு:இ - மெயில்: spkaruna@gmail.com அலைபேசி: 98404 88111