புதுக்கோட்டை; காதலியின் சாவில் மர்மம் இருப்பதாக, காதலன் கொடுத்த புகார்படி, ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, திருவரங்குளம், இடையன்வயலைச் சேர்ந்த, நாகேஷ்வரன் மகள் சாவித்திரி, 19. நாகேஷ்வரன், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார்.புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரியில், பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவரும், தோப்புக்கொல்லையைச் சேர்ந்த பெயின்டர் விவேக், 20, என்பவரும், இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.சில நாட்களுக்கு முன், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, வாடகை காரில் குளித்தலைக்கு சென்றுள்ளனர்.
அங்கு, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது, விவேக்கிற்கு, 21 வயது பூர்த்தி யாகாதது தெரிந்தது. இதனால், இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பெற்றோர், இருவரையும் தனித்தனியாக பிரித்து, வீட்டிற்கு அழைத்து சென்றனர்.தொடர்ந்து, சாவித்திரிக்கு திருமண ஏற்பாடு செய்து உள்ளனர். மனமுடைந்த சாவித்திரி, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இரவோடு இரவாக, சாவித்திரி உடலை எரித்து விட்டனர்.காதலி சாவில் மர்மம் இருப்பதாக, எஸ்.பி., யிடம் விவேக் புகார் அளித்தார். இதையடுத்து, சாவித்திரியின் தாய் சாந்தி, 45, மற்றும் உறவினர்கள் உட்பட ஏழு பேர் மீது, ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE