தவமாய் தவமிருந்த தந்தை: நல்லெண்ண தூதர் நேத்ரா நெகிழ்ச்சி| Dinamalar

தவமாய் தவமிருந்த தந்தை: நல்லெண்ண தூதர் நேத்ரா நெகிழ்ச்சி

Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (8)
Share
இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் எல்லோருக்கும் இல்லை. கொரோனா கோரத்தாண்டவமாடும் ஊரடங்கில் இப்படி எண்ணம் வர வேண்டும் என்றால் வறுமையின் வலி தெரிந்திருக்க வேண்டும். ஊரடங்கில், பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்த ஏழை, எளிய மக்களின் வறுமை வலி தெரிந்து உதவிய மதுரை மாணவி நேத்ரா தமிழனின் பெருமையை உலகறிய செய்திருக்கிறார். பிரதமர் மோடியின் பாராட்டுக்கு பின்
 தவமாய் தவமிருந்த தந்தை: நல்லெண்ண தூதர் நேத்ரா நெகிழ்ச்சி

இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் எல்லோருக்கும் இல்லை. கொரோனா கோரத்தாண்டவமாடும் ஊரடங்கில் இப்படி எண்ணம் வர வேண்டும் என்றால் வறுமையின் வலி தெரிந்திருக்க வேண்டும். ஊரடங்கில், பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்த ஏழை, எளிய மக்களின் வறுமை வலி தெரிந்து உதவிய மதுரை மாணவி நேத்ரா தமிழனின் பெருமையை உலகறிய செய்திருக்கிறார். பிரதமர் மோடியின் பாராட்டுக்கு பின் சர்வதேச அமைப்பால், ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ள நேத்ரா பேசுகிறார்....

ராமநாதபுரம் மேலசிறுபோது கிராமத்தில் விவசாயியாக இருந்த தந்தை மோகன், அம்மா பாண்டிச்செல்வி 2001ல் மதுரை வந்தோம். பாட்டி கனகம்மாள் மேலமடையில் தந்தைக்கு சலுான் கடை வைத்து கொடுத்தார்.

அப்பகுதி மக்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக பழகுவார்கள். தந்தை தன்னால் முடிந்த சிறு உதவிகளை செய்வது வழக்கம். இந்நிலையில் தான் கொரோனா தீவிரமாகி ஊரடங்கு வந்தது. இதனால் மேலமடை, நாங்கள் வசிக்கும் தாசில்தார் நகர் பகுதியில் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் உதவி கேட்டு எங்கள் வீட்டு கதவை தட்டினர். 'நம்மை நம்பி வந்தவர்களுக்கு உதவ வேண்டும். என் படிப்பிற்காக சேமித்த ரூ.5 லட்சத்தை வங்கியில் இருந்து எடுத்து கஷ்டபடுபவர்களுக்கு நிவாரணமாக கொடுங்கள்'என தந்தையிடம் கூறினேன். முதலில் தயங்கிய தந்தை, நான் விரும்பி நிர்ப்பந்தித்ததால் சம்மதித்தார். அத்தியாவசிய பொருட்களின்றி தவித்த 1500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பலசரக்கு வழங்கினோம்.

சென்னை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.35 ஆயிரம் வழங்கினோம்.இந்த தகவல் நண்பர்கள் மூலம் வெளியே தெரிய துவங்கி பிரதமர் மோடி வரை சென்றது. 'மன் கீ பாத்'தில் பேசிய பிரதமர் எங்கள் சேவையை பாராட்டினார். அதற்கு பின் உலகளவில் இந்த சேவை தெரிய வந்தது. இதன் பலனாக 'யுனைடட் நேஷன்ஸ் டெவலப்மென்ட் புரோகிராம்' என்ற சர்வதேச அமைப்பு என்னை ஏழைகளுக்கான நல்லெண்ண துாதராக்கியது.

நியூயார்க், ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் அழைத்தது.தற்போது 9ம் வகுப்பு செல்லும் எனக்கு ஐ.ஏ.எஸ்., ஆவது தான் லட்சியம். வறுமை இல்லாத உலகை உருவாக்க உழைக்க போகிறேன். சர்வதேச கூட்டத்தில் பேச ஆங்கிலம், ஹிந்தி பேச்சு பயிற்சி பெறுகிறேன். என் படிப்பிற்காக தவமாய் தவமிருந்து பணம் சேர்ந்த தந்தை, வருங்கால படிப்பு செலவை ஏற்பதாக கூறிய இயக்குனர் பார்த்திபன் உட்பட அனைவருக்கும் நன்றி, என்றார்.
nethramohan 769@gmail.com

- ஸ்ரீனி
- தீப்சி

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X