புதுடில்லி: தன் தந்தை ராஜிவைப் போலவே, தலைமுடி ஸ்டைலை மாற்றிக் கொண்டுள்ள காங்., - எம்.பி., ராகுல், அடிக்கடி பொருளாதார வல்லுனர்களுடன் பேசி வருகிறார்.
இப்படி யாருடன் விவாதித்தாலும், தவறாமல் மோடியை கடுமையாக விமர்சிக்கிறார். இன்னொரு பக்கம், தினந்தோறும், 'டுவிட்டர்' பக்கத்தில், காரசாரமாக பதிவிட்டு வருகிறார். அதில் அரசு மீது, ஏகப்பட்ட விமர்சனங்களை அடுக்குவதும் வழக்கம்.இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னை பற்றியும் கடுமையாக விமர்சித்த ராகுல், 'ஏன், பிரதமர் அமைதியாக இருக்கிறார்' என, பதிவிட்டார்.
ஆனால், இது காங்கிரசுக்குள்ளேயே பல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது.'விஷயத்தை முழுவதும் புரிந்து கொள்ளாமலேயே ராகுல் பேசி வருகிறார்' என, புலம்புகின்றனர், காங்கிரசார். 'எல்லை பிரச்னை, மிகவும் சிக்கலான, உணர்ச்சி பூர்வமான விவகாரம். எதிர்க்கட்சியாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்' என்கின்றனர், அக்கட்சின் சீனியர் தலைவர்கள்.

பா.ஜ.,வின் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சரை சந்தித்த, காங்., சீனியர் தலைவர் ஒருவர், தனக்கு பெரிய அரசு பங்களா ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, ராகுல் போக்கைப் பற்றி அந்த சீனியர் தலைவர் குறைபட்டுக் கொண்டாராம். 'வரலாற்று ஆவணங்கள் எதையும் படிப்பது கிடையாது; கூகுளில் தேடிப் பார்த்து அறிக்கை அளிக்கிறார். இவர், ராகுலா அல்லது கூகுளா என தெரியவில்லை' என, கிண்டலாக பேசியுள்ளார். 'ராகுலுக்கு ஆலோசனை அளிக்கும் குழுவும், அரை வேக்காடுகள். ஏதோ காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்' என விரக்தியாக, அமைச்சரிடம் சொன்னாராம், காங்கிரசின் சீனியர் தலைவர்.