சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

மாமியார்-மருமகள் சண்டைக்கு முடிவே இல்லையா?

Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மாமியார்-மருமகள் சண்டைக்கு முடிவே இல்லையா?

மாமியார்-மருமகள் பிரச்சனை இங்கு மட்டுமல்ல உலகமுழுக்க உண்டு என்பதற்கு ஒரு வேடிக்கையான குட்டிக் கதை சொல்லும் சத்குரு, இந்த பிரச்சனைக்கு பின்னாலுள்ள பெண்களின் உளவியல் பற்றி பேசுகிறார்! சரி... இதற்குத் தீர்வு என்ன? தொடர்ந்து படித்தறியுங்கள்!

"என் அம்மாவை ஒரு மாமியாராக பாட்டி நடத்திய விதத்தைக் கண்டு வேதனைப்பட்டவன் நான். ஆனால், இன்று என் அம்மா தான் மருமகளாக இருந்து அனுபவித்ததையெல்லாம் மறந்துவிட்டவள் போல, என் மனைவியிடம் வெறுப்பைப் பொழிவது கண்டு அதிர்கிறேன். தலைமுறை தலைமுறையாக மாமியார்-மருமகள் உறவு மட்டும் ஏன் இப்படி மோசமாகவே தொடர்கிறது?"

ஓர் இளைஞன் தான் விரும்பும் பெண்ணைத் தன் அம்மாவிடம் அறிமுகம் செய்வதற்காக, வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தான். அவள் தன்னுடன் நான்கு தோழிகளையும் அழைத்து வந்தாள்.

அந்த இளைஞன் தன் அம்மாவிடம், "வீட்டுக்கு வந்திருக்கும் இந்த ஐந்து பெண்களில் யாரை நான் மணக்க விரும்புகிறேன் என்று கண்டுபிடி, பார்க்கலாம்!" என்று வேடிக்கையாகப் புதிர் போட்டான். அம்மாவைக் குழப்புவதற்காக அத்தனை பெண்களிடமும் ஒரே மாதிரியாகச் சிரித்துப் பேசினான்.

விருந்து முடிந்து பெண்கள் விடைபெற்றுச் சென்றதும், அம்மா அவனிடம், "சிவப்பு டாப்ஸ் அணிந்திருந்த பெண்ணைத்தானே நீ விரும்புகிறாய்?" என்றாள்.

மகன் திகைத்துப் போய், "அவளிடம் நான் அதிகம் பேசக்கூட இல்லையே, எப்படி அம்மா கண்டுபிடித்தாய்?" என்று கேட்டான். "சுலபம்! அவளைப் பார்த்த கணத்திலேயே ஏனோ அவளை எனக்குப் பிடிக்கவே இல்லை" என்றாள் அம்மா.

இது இங்கல்ல... அமெரிக்காவில் புழங்கும் நகைச்சுவை! மாமியாரும், மருமகளும் சேர்ந்து வாழாத மேலை நாடுகளிலும் கூட, மாமியார் மருமகளுக்கு இடையில் இனிமையான உறவு இருப்பதில்லை என்று புரிகிறதா?

இதற்கு அடிப்படைக் காரணம், பெண்களிடத்தில் இயல்பாகவே இருக்கும் உடைமை உணர்வுதான்.

இந்த உணர்வு இல்லையென்றால், குழந்தையை ஈன்றவுடன் அதை பாதுகாக்கும் உணர்வு தாயிடம் இல்லாமல் போயிருக்கும். உயிரினத்தில் அடுத்த தலைமுறை என்று ஒன்று பாதுகாக்கப்படாமலே போயிருக்கும்.

இந்த உணர்வை மிருகங்களிடம் கூட நீங்கள் காணலாம்.

உடல்ரீதியான இந்தப் பாதுகாப்பு உணர்வு, மனிதர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு இயற்கை கொடுத்த வரம். இந்த உடைமை உணர்வு மட்டும் பெண்களிடத்தில் இல்லாதிருந்தால், எந்த மனிதக் குழந்தையும் எதிரிகளிடமிருந்து தப்பி உயிர் பிழைத்திருக்காது. தாய் தன் உடைமை என்று நினைத்துப் பார்த்துக் கொள்ளாவிட்டால், சிசுவுக்கு அதன் குழந்தைப் பருவம் இனிமையற்றுப் போய்விடும்.

ஆனால், பெண்கள் ஒரு கட்டத்தில் இந்த உடைமை உணர்வைத் தாண்டி வரவேண்டும். அப்படி அவர்கள் கவனத்துடன் முழு விழிப்புணர்வுடன் அந்த நிலையைக் கடந்து வந்துவிட்டால், மாமியார் - மருமகள் இடையில் பக்குவமான உறவுகள் பூத்துவிடும்.

இப்படி மிக நேர்த்தியாக வாழ்க்கையை நடத்தும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள்.

"மாமியார் - மருமகள் அளவுக்கு மாமனார்-மருமகன்களிடம் போராட்டம் இல்லையே... எனில், ஆண்கள் பக்குவமானவர்களா?"

அப்படி இல்லை. ஆணிடமும் போராட்டம் இருக்கிறது. ஆனால், அது வேறு அளவில் வேறுவிதமாக இருக்கிறது. பொதுவாக, தன் மகளின் வாழ்க்கை சீராக, இனிமையாக அமைய வேண்டுமே என்ற கவலை தகப்பனிடம் இருக்கும். அப்படி அமைந்து அவள் சந்தோஷமாக இருந்துவிட்டால், போதும்! அவனுக்குப் பூரண திருப்திதான். அவன் வேறு எது பற்றியும் யோசிப்பது இல்லை.

தங்கள் மாப்பிள்ளைகளுடன் வித்தியாசமில்லாமல் மிக நட்பாகப் பழகும் மாமனார்கள் பலரை நீங்கள் சந்திக்கலாம். செஸ், கோல்ஃப், கேரம் என்று அவர்கள் இணைந்து விளையாடுவார்கள். சேர்ந்து பார்ட்டிகளுக்குப் போவார்கள்.

மாமியாரும், மருமகளும் முட்டி மோதும் அளவுக்கு மாமனாரும், மருமகனும் போராடுவதில்லை. காரணம், ஆண்களிடம் உடைமை உணர்வு குறைவு என்பதுதான்!
"உங்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலம் பொருள்தன்மையைக் கடந்தது. அதை உணர்த்தி உங்களை மெய்மறக்கச் செய்யும் எந்தவொரு வழிமுறையும் யோகாதான்."
"பெண்கள்தானே புதிய சூழ்நிலையில் அடியெடுத்து வைக்கிறார்கள்? ஆண்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை என்பது ஒரு காரணமாக இருக்குமோ?"

பழைய காலமாக இருந்தால் நீங்கள் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். ஆனால், இன்றைக்குக் கூட்டுக் குடும்பங்களை எங்கே காணமுடிகிறது? திருமணமானதும், தனிக்குடித்தனம் போய்விடும் இளைஞர்கள்தானே அதிகம்! மாமியாரும், மருமகளும் வெவ்வேறு வீடுகளில் வாழ்ந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் கசப்பு உணர்வுகள் குறைந்ததாகத் தெரியவில்லையே!

இது பெண்களின் கையில்தான் இருக்கிறது. மாமியாரும், மருமகளும் கவனமாகச் செயல்பட்டு, ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் உடைமை உணர்விலிருந்து வெளியே வந்துவிட்டால், இருவர் உறவிலும் அமுதம் இனிக்கும்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-ஜூன்-202014:59:46 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஐயா வணக்கம் எனக்கு ரெண்டுபிள்ளைகள் ரெண்டு மருமகள் ஒருமகள் மருமகன் எங்களுக்குள் எப்போதுமே நெருங்கிய அன்பான உறவு உண்டு சிலர் சொல்லுவாங்க உணர மருமகலகல் வெளிநாட்டுலேயிருக்காங்க. ரெண்டு பக்கமும் விட்டுக் கொடுக்கும் குணம் இருக்கு. ஒருகாயின் இருபுறம்போல. மருமக ரொம்பவே சாது வேலைக்கு போயினருந்தா பெரியவாளோட இருந்தால் நன்னாயிருக்கும் என்று லாங் லீவு போட்டுட்டு வீட்டுலேயிருந்தா இன்லாஸ் போரென்னதும் தடுத்தால் மாமா நான் நாளைக்கி என் வேலை ஜோஇன் பண்ணவேண்டும் இப்போ போவாதீங்க என்று தடுத்து அத்தையே வீட்டை நிர்வாகம் செய்யட்டும் லீவுநாட்களிலே நான் செய்றேன் என்று சொல்லிட்டு பிரதி சனி ஞாயிறு இன்லாஸ் காப்ரெஞ் பண்ணி அருகிலே உள்ள கோயில்களுக்கு அனுப்பிட்டால் சண்டையும் ஒஞ்சுது ,விட்டுக் கொடுத்து வாழந்தால் நிம்மதி ந்சச்சயம் நானும் என் வீட்டில் வாழவந்த மருமகளகளிடம் அவ்ளோ அன்போடுதான் இருக்கேன் அவாளும் அம்மா அம்மா என்று பாசமாயிருக்காங்க
Rate this:
Ray - Chennai,இந்தியா
18-ஜூன்-202006:29:58 IST Report Abuse
RayVERBATIM DITTO...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X