லக்னோ: உ.பி.,யில் மதுவுக்கு அடிமையான வில்லக் குரங்கு அதன் வாழ்நாள் முழுவதும் கூண்டில் அடைக்கப்பட உள்ளது.
உ.பி., மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அதற்கு கலுவா என்று பெயர் சூட்டப்பட்டது. குரங்கு வளர்த்தவர் குடிமகனாக இருந்துள்ளார். தான் மது அருந்தும் போதெல்லாம் அதற்கு மது கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் குரங்கும் மதுவுக்கு அடிமையானது. மது குடிக்காவிட்டால் அமைதியாக இருக்க முடியாது என்ற நிலைக்கு அது ஆளானது. திடீரென்று குரங்கின் உரிமையாளர் இறந்து விட குடிகாரக் குரங்கிற்கு மது வாங்கித் தர ஆளில்லாமல் போனது.
மது கிடைக்காததால் வெறி கொண்ட குரங்கு வீதியில் செல்வோரை கடிக்கத் தொடங்கியது. இதுவரை இந்த வில்லக் குரங்கிடம் 250 பேருக்கும் அதிகமானோர் கடிவாங்கி விட்டனர். குரங்கிடம் கடிபட்ட ஒருவர் பரிதாபமாக இறந்து போனார். இந்நிலையில் மிர்சாபூர் மக்கள் குரங்கைக் கண்டு பயப்படும் சூழல் உருவானது.
நிலைமை விபரீதம் ஆனதும் வனத்துறையினர் விரைந்து வந்து கலுவா குரங்கினைப் பிடித்து அடைத்தனர். தற்போது உ.பி., கான்பூர் வன விலங்குகள் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் அடைபட்டுக்கிடக்கிறது.
இந்தக் குரங்கை பராமரிக்கும் கால்நடை மருத்துவர், ' குரங்கினை ஒரு அறையில் வைத்து பராமரித்தோம், எப்போதும் இது வெறியோடு தான் இருக்கிறது. அதன் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. மூன்று ஆண்டுகளான பிறகும் உணவு கொடுத்து வருபவரிடம் கூட அன்பாக பழகவில்லை. எனவே தற்போது இந்த குரங்கினை வெளியில் விட முடியாது. ஆறு வயதாகும் இந்த குரங்கிற்கு வாழ்நாள் முழுவதும் கூண்டுக்குள் தான்' இவ்வாறு கூறினார்.

காட்டில் சுதந்திரமாக திரிந்த குரங்கிற்கு மதுவை ஊற்றி வந்த மனிதன் தன் கெட்ட பழக்கத்தால் போய்ச் சேர்ந்து விட்டான். ஆனால், மது கிடைக்காமல் வெறி பிடித்த குரங்கு தன் மீதி நாட்களை கம்பிகளுக்குள் கழிக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE