சென்னை: லடாக்கில் வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் சீனா ராணுவத்துடனான மோதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரும் இத்தாக்குதலில், வீரமரணம் அடைந்த வீரர்களில் ஒருவர். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியா - சீனா எல்லையில் லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனியும் உயிரிழந்துள்ளார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி, அவர்களின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தனது இன்னுயிரை தியாகம் செய்த பழனியின் குடும்பத்திற்கு, உடனடியாக ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும், உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE