சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

என்னங்கய்யா உங்க நியாயம்?

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

என்னங்கய்யா உங்க நியாயம்?

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள், 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த நீதிமன்றம், 'இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அடிப்படை உரிமை இல்லை' என்று அடித்துச் சொல்லிவிட்டது. 'தமிழகத்திற்கு, தனியாக, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் எனில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளுங்கள்' என, தெளிவாக கூறிவிட்டது.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்கும் புண்ணியவான்கள், பொருளாதார அடிப்படையில், பின்தங்கிய முற்போக்கு வகுப்பில் பிறந்த ஏழைகளுக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மறுக்கின்றனர்.இது சம்பந்தமாக, வருமானம் மற்றும் சொத்துச் சான்றிதழ் கேட்டு, யாராவது விண்ணப்பித்தால், அதை வழங்கக் கூடாது என, தாசில்தார்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தக் கொடுமையை, பிராமணர் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கும் மேல் உள்ளோர்; 100 சதுர அடிக்கு வீட்டு மனை வைத்திருப்போர்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போர், பொருளாதார அடிப்படையில், பின்தங்கியவர்களாக கருதப்பட மாட்டார்களாம்.அதே அளவு சொத்து இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தால், பரம ஏழைகளாகக் கருதப்படுவராம். என்னங்கய்யா உங்க நியாயம்?இட ஒதுக்கீடு விஷயத்தில், ஒரு கண்ணில், வெண்ணெய்; இன்னொரு கண்ணில், சுண்ணாம்பு தடவும், திராவிட கட்சி ஆட்சியாளர்களின் போக்கு கண்டிக்கத்தக்கது.இட ஒதுக்கீடு கொள்கை, தரமான மருத்துவர்கள் உருவாவதற்கு, 'வேட்டு' வைக்கிறது என்பது, நிதர்சனமான உண்மை. 'நோகாமல் நுங்கு சாப்பிடுவோர்' மருத்துவர்களாகி விட்டால், மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் போய் விடும்.

மின் வாரியத்தின், 'குலேபகாவலி ஆட்டம்'

ஆர்.தியாகராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' ஊரடங்கு காலத்தில், நான்கு மாத மின் நுகர்வு கட்டணத்தில், மக்களிடம் நுாதன கொள்ளையில் ஈடுபட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதோ என, சந்தேகம் எழுகிறது.'மின் வாரியம், மக்களை கொள்ளையடிக்கிறது' என, எதிர்க்கட்சிகள் அறிக்கை வெளியிட்டு, தன் கடமையை பூர்த்தி செய்து விட்டன; எதிர்க்கட்சிகள், இன்னும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். 'மின் வாரியத்தின் கணக்கீடு, திறந்த புத்தகம்' என, மின்சாரத் துறை அமைச்சர், தங்கமணி விளக்கம் சொல்லிவிட்டார். அந்த திறந்த புத்தகத்தை பார்த்தால், மின் வாரியத்தின் கொள்ளை தெளிவாக தெரிகிறது.தமிழகத்தில், நான்கு மாதங்களாக, மின் நுகர்வு கணக்கு எடுக்கப்படவில்லை. இந்த நான்கு மாதத்தில், இரண்டு முறை கணக்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால், நான்கு மாதம் கடந்து, இப்போது தான், நுகர்வு கணக்கு எடுக்கப்படுகிறது.

'சென்ற மாதத்திற்கு, அதற்கு முந்தைய மாதத்தின் தொகையையே செலுத்துங்கள்' என, அறிவித்து விட்டனர். மின்னணு பரிவர்த்தனை வசதி உள்ளவர்கள், அந்த தொகையை செலுத்தி இருக்கலாம்; பாமர மக்கள் செலுத்தி இருக்க வாய்ப்பு இல்லை.இப்போது, நான்கு மாதம் கடந்து, மின் நுகர்வு கணக்கிடப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு தான், அரசின், 'குலேபகாவலி ஆட்டம்' ஆரம்பமாகிறது. நான்கு மாத நுகர்வை, இரு சமமாக பிரித்து, அதற்கான இலவசத்தை நீக்கி, கட்டண நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால் வாரியம், 'நரித்தனமாக' மொத்த நுகர்வில், ஒரு மாத இலவசத்தை கழித்து, அனைத்து யூனிட்டுக்கும் சேர்த்து, கட்டண நிர்ணயம் செய்திருக்கிறது. இதனால், பெரும்பாலான நுகர்வோர், 500 யூனிட் எல்லையை கடந்திருப்பர். வழக்கமான கட்டணத்தை விட, இப்போது அதிக தொகையை, மக்கள் செலுத்த வேண்டும். கொரோனா காலத்திலும், கொடூர முகத்தை காட்டியிருக்கிறது, மின் வாரியம்.மக்களாகிய நாம், இந்த தண்டச்செலவை ஏற்று, அழத் தான் வேண்டுமா; இல்லை, இதற்கு தீர்வு கிடைக்குமா?
'பிரஷர் குக்கர்' வாழ்க்கை வேண்டாமே!-பிரபு சங்கர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இன்றைக்கு, எத்தனை பேர், 'கொரோனா' தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இது, நேற்றைய பாதிப்பைவிட அதிகமா?' என்ற, கேள்விகளோடு தான், பொழுது முடிகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, மக்களிடையே அச்சத்தை பரப்புகிறது. இதற்கு, அரசு மீது குறை சொல்வதா, இல்லை அலட்சியமாக உள்ள மக்களை குற்றம் சாட்டுவதா என, தெரியவில்லை.அதே நேரம், நம் மருத்துவ துறையினரின் சேவையால், குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்ற செய்தி, மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
'இன்றைய பொழுதை, கொரோனா இன்றி கழித்துவிட்டோம்; நாளை எப்படி விடிகிறது என, பார்க்கலாம்' என்றபடியே தான், நாம், துாங்கச் செல்கிறோம். நம் வாழ்க்கை, 'பிரஷர் குக்கர்' போல அமைந்துவிடக் கூடாது. ஒவ்வொரு நாளும், மன அழுத்தத்தில் இருப்பது நல்லதல்ல. எந்நிலையிலும், நம்மை சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு, விளையாட்டு, ஆன்மிகம், மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.எந்நேரமும், 'டிவி'யில், 'பிரேக்கிங்' செய்தி பார்க்கும் குடும்பத்தில், நிச்சயம் மன அழுத்தம் குடிகொண்டிருக்கும். செய்தி சேனலில் இருந்து, 'காமெடி' சேனலுக்கு மாறுங்கள்.கபசுர குடிநீர் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள். இயல்பாக இருங்கள்; பதற்றம் தேவையில்லை. கவலைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. கைவசம் இருக்கும் தற்காப்பு முறைகளை பின்பற்றுங்கள். விரைவில், கொரோனாவிற்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப்படும். அதற்கான பணியில், உலகெங்கும் மருத்துவ குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாம் நம்பிக்கை கொள்வோம். உலகம், கொரோனாவிலிருந்து விடுதலை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
18-ஜூன்-202007:44:07 IST Report Abuse
chennai sivakumar EB has correctly done the calculations as mentioned in the website. Total consumption for 4 months divided by two. Calculate the tariff as per the . Then multiply the amount due x 2. You get the total due and deduct the adhoc amount paid. It's perfect and yesterday I received the bill, checked and found correct.Not only for me but also for few of our neighbours I worked out yesterday night and found them to be in order. Many don't understand the catches in the tariff . That is why the confusion.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X