பொது செய்தி

இந்தியா

நம் ராணுவம் எதையும் சந்திக்கும்: அனுபவம் பகிரும் படை வீரர்கள்

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நம் ராணுவம் எதையும் சந்திக்கும்: அனுபவம் பகிரும் படை வீரர்கள்

உயரம் மிகுந்த பனிச் சிகரமான, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா - சீனா இடையே, போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இரு தரப்பிலும், ராணுவம் மற்றும் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.

இரு நாட்களுக்கு முன், இரு தரப்பினர் இடையே கல், முள்கம்பி போன்றவற்றால் தாக்கிக் கொண்டதில், தமிழக வீரர் உட்பட, 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும், 43 பேர் உயிரிழந்தனர்.கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் நேரத்தில், போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய மக்கள் அனைவரும், நம் ராணுவத்துக்கு துணையாக நின்று வருகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட லடாக் பகுதியில், நாட்டை காக்க நிற்கும் ராணுவத்தினர், பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர்.

'அன்றும், இன்றும் சீனா குடைச்சல்'இந்திய ராணுவத்தில், சுபேதாராக பணியாற்றி, ஓய்வு பெற்ற, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சாத்தையா கோபாலகிருஷ்ணன், 77, தன் அனுபவம் குறித்து கூறியதாவது:கடந்த, 1962ம் ஆண்டு, இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன். அந்த ஆண்டு சீன போர் வந்து, பங்கேற்றேன். ஒரு கம்பெனியில், 300 - 450 வீரர்கள் வரை இடம்பெற்றிருப்பர். நான் ஒரு கம்பெனி சுபேதாராக வழி நடத்தியுள்ளேன்.தொடர்ந்து, 1965 மற்றும் 1971ம் ஆண்டு போர்களிலும் பங்கேற்று உள்ளேன்.

ஹிமாச்சல், அருணாச்சல், லடாக் உள்ளிட்ட இடங்களிலும், தலா, ஒரு ஆண்டு பணியாற்றி உள்ளேன்.லடாக் பகுதியில், பனிக் காலத்தில் அதிகளவு பனி கொட்டும்; சாதாரணமாக இருக்க முடியாது. இரவு நேரங்களில், ராணுவ வீரர்கள் தங்க, தகர சீட்டில், 'ஷெட்' அமைக்கப்படும்.அந்த ஷெட்டில் பனிப்பொழிவு விழுந்து கொண்டே இருக்கும். அதை, அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அகற்ற, ராணுவ வீரர்களை ஈடுபடுத்த வேண்டும்.சில நேரங்களில், அதிகளவு பனிப்பொழிவு ஏற்பட்டு, அந்த ஷெட் சரிந்து, வீரர்கள் உயிரிழந்த சம்பவங்கள் உண்டு.

அங்கு பணியில் இருக்கும் வீரர்களுக்கு அதிகபட்சம், இரண்டு மணி நேரம் தான் ஓய்வு, துாக்கம் எல்லாம்.அப்போது, தலை முதல், கால் வரை, பனியை தாங்கும், 'ஸ்லீப்பிங் பேக்' அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றி, ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.சில நேரங்களில், சரியாக சாப்பாடு கிடைக்காது. பனியால், சாலை வழியாக செல்ல முடியாது. ராணுவ வாகனங்கள் வர முடியாது. அந்த நேரங்களில், ஹெலிகாப்டரில் வீரர்கள் வந்து, பாராசூட்டில் இறங்கி உணவு கொடுப்பர்.குறிப்பிட்ட துாரத்தில், ஆங்காங்கே மருத்துவ முகாம் மற்றும் மருந்துகள் இருக்கும். இவை அனைத்தும், காலநிலையை பொறுத்து தான், எங்களுக்கு கிடைக்கும்.பொதுவாக ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுகள் வழங்கப்படும்.

எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், நாட்டின் எல்லையில் நிற்பதால், ராணுவ வீரருக்கு வேறு எதுவும் நினைக்க தோன்றாது.நம் நாட்டை காப்பது மட்டுமே நினைவில் இருக்கும். மூன்று போர்களை பார்த்து, 28 ஆண்டுகள் பணி செய்து, 1990ல் ஓய்வு பெற்றேன். அப்போதும், இப்போதும் நம் ராணுவம் எதையும் சந்திக்கும் திறன் பெற்றது. சீனா இதேபோன்று தான், எப்போதும், ஏதோ ஒரு வகையில் குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கும். யாரையும் சமாளிக்கும் ஆற்றல், நம் ராணுவத்துக்கு உள்ளது. என் இரண்டாவது மகனை ராணுவத்தில் சேர்த்து, 17 ஆண்டுகள் பணி செய்துள்ளார்.'மன தைரியம் தான் உயிரை காப்பாற்றும்'

இந்திய ராணுவத்தில், விங் கமான்டராக இருக்கும், கோவையைச் சேர்ந்த கணேஷ், 40, கூறியதாவது:லடாக் பகுதியில் பனிக் காலங்களில், மைனஸ், 40 முதல், 48 டிகிரி வரை செல்லும். அப்போது, சாலையே கண்ணுக்கு தெரியாது. இப்போது வெயில் காலம் என்பதால், ஓரளவு காலநிலை சராசரியாக இருக்கும்.குறிப்பிட்ட இடங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு, முன்கூட்டியே மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பர்.மேலும், இந்த பகுதிகளில் வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அவசர நேரத்தில், ஹெலிகாப்டரில் வினியோகம் செய்யப்படும்.பெரும்பாலும், லடாக் போன்ற பகுதியில் இருக்கும் வீரர்களுக்கு, 'டின்' உணவு பொருட்கள் வழங்கப்படும். இந்த டின்னில் அடைத்து வைத்திருக்கும் உணவுப் பொருளை, சுடு தண்ணீரில் போட்டு சாப்பிட வேண்டும்.மற்ற நேரங்களில் அரிசி, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யப்படும். இதற்காக, கெரசின் அடுப்புகள் பயன்படுத்தப்படும். அப்போதைய நேரத்துக்கு என்ன கிடைக்கிறதோ, அதை சாப்பிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட, ராணுவ வீரர்கள் தயார்படுத்தப்பட்டு இருப்பர். மற்ற இடங்களை போல், இந்த இடத்தில், மருத்துவ சிகிச்சை என்பது சாதாரணமாக கிடைக்காது.மருத்துவ குழுவினர் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு முயற்சி செய்வர். இயலாத நேரத்தில், ஹெலிகாப்டர் வரவழைத்து, வீரர்களை மீட்க வேண்டும். அதுவரை அந்த வீரரின் மன தைரியம் தான், உயிரை காப்பாற்றி கொண்டு இருக்கும்.பனிப் பொழிவு நேரத்தில், ஹெலிகாப்டரை இயக்குவதும் சுலபமானது இல்லை. ஆக்சிஜன் அளவு குறையும்; ஹெலிகாப்டரில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடையை சுமந்து, அந்த பகுதிகளில் பறக்க முடியாது. இது போன்ற எண்ணற்ற சவால்கள் உள்ளன
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
18-ஜூன்-202010:55:35 IST Report Abuse
Mano நம் ராணுவ வீரர்கள் எல்லோருமே தியாகிகள்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X