எல்லையில் மோதல் ஏற்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எல்லையில் மோதல் ஏற்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (11)
Share
எல்லையில் மோதல் ஏன்? பரபரப்பு தகவல்

புதுடில்லி :சர்ச்சைக்குரிய பகுதியில் சீன வீரர்கள் அமைத்திருந்த கண்காணிப்பு கூடாரத்தை,நம் வீரர்கள் அகற்ற முயன்றபோது தான், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய - சீன எல்லையில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:எல்லையில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லடாக் அருகேயுள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பின்வாங்கும் பணியில், இரு நாட்டு வீரர்களும் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, இந்த பகுதியில் சீன ராணுவம் சார்பில் கண்காணிப்பு கூடாரம் அமைக்கப்பட்டது. இதுபோன்ற கூடாரங்களை இரு தரப்பும் அமைக்கக் கூடாது என ஏற்கனவே நடந்த பேச்சில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.இதை மீறி, சீன ராணுவம் கண்காணிப்பு கூடாரம் அமைத்ததை, இந்திய ராணுவ கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான வீரர்கள் கடுமையாக எதிர்த்தனர். அந்த கூடாரத்தை அகற்ற முயன்றனர். அப்போது, சீன வீரர்கள் ஒரு சிலர் மட்டுமே அந்த பகுதியில் இருந்தனர்.அவர்கள், இந்திய வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். சில நிமிடங்களில், அந்த இடத்துக்கு ஏராளமான சீன வீரர்கள் வந்தனர். அனைவரும் பாதுகாப்பு உடை அணிந்திருந்தனர்.

பெரிய கற்கள், இரும்பு தடிகள், முள்வேலிகள் ஆகியவற்றுடன் வந்த அவர்கள், இந்திய வீரர்களை கொடூரமாக தாக்கினர். இதற்கிடையே, இந்திய வீரர்கள் மேலும் சிலரும் அங்கு வந்தனர்.
இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் கடுமையான மோதல் நடந்தது. இரு தரப்பையும் சேர்ந்த சில வீரர்கள், பனி உறைந்து போயிருந்த கல்வான் ஆற்றில் விழுந்தனர்.இந்த கடுமையான மோதலில் தான், நம் ராணுவத்தினர், 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.சீனா தரப்பில், 43 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் சிலரை, சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்றதாகவும், பின் அவர்களை விடுவித்ததாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையே, லடாக் மோதலை அடுத்து, எல்லை பிரச்னையில், சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த பழமையான ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்ய, இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஜனாதிபதி இரங்கல்



சீன தாக்குதலில் இந்திய வீரர்கள் இறந்ததற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களின் துணிச்சலையும், வீரத்தையும் நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.'முப்படைகளின், 'சுப்ரீம் கமாண்டர்' என்ற முறையில், வீரர்களின் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X