பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவுடன் சீனா போரிட்டால் தற்கொலைக்கு சமம்!

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

இந்தியா - சீனா இடையே, 3,500 கி.மீ., எல்லை குறித்து, இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதனால், லடாக், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், இமாச்சல், திபெத் ஆகிய எல்லைப் பகுதிகளில், சீன ராணுவம் அத்துமீறிய செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது. மேலும், லடாக் எல்லைப் பகுதியில் இந்திய அரசு மேற்கொள்ளும் சாலை அமைத்தல், பாலம் கட்டுதல், மின் இணைப்பு பெறுதல் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு, சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


மோதல்


ஆனால், சீனா ஏற்கனவே இப்பகுதியில் சாலை அமைத்து, பாலங்கள் கட்டி, மின் இணைப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளது. அதே வசதிகளை இந்தியா தன்னுடைய பகுதியில் செய்யும்போது, சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.இந்நிலையில், லடாக் எல்லைப் பகுதிகளில், மே மாதத்தில், இந்திய - சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. எல்லைப் பகுதிகளில், சீனா தன் ராணுவத்தினரை குவிக்கத் துவங்கியது. பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்திய ராணுவமும் படைகளைக் குவித்தது. இதனால், 2019ம் ஆண்டில் ஏற்பட்ட டோக்லாம் பிரச்னைக்கு பின், எல்லைப் பகுதியில் மீண்டும் இந்தியா - சீனா இடையே பதற்றம் ஏற்பட்டது.லடாக் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த சண்டையில், 20 இந்திய ராணுவ வீரர்களும், சீனாவில், 40க்கும் மேற்பட்ட வீரர்களும் இறந்தனர். போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனாவை துணிச்சலுடன் எதிர்கொள்ள, இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன.


முரட்டுத்தனம்


சீனாவின் செயல்பாடுகள், முரட்டுத்தனமாகவும், தாக்குதல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாகவும் இருக்கிறது. இதற்காக, அவர்களது எல்லை முழுவதும் வீரர்கள் குவிந்துள்ளனர். இந்தியப் பெருங்கடலில், பெரும்பான்மையான கப்பல்களை நிறுத்தி உள்ளது.இது போன்ற செயல்பாடுகள், சாதாரண நோக்கமாகத் தெரியவில்லை. அவர்களது நோக்கம், எதை நோக்கி இருக்கிறது என்பதையும் உடனடியாக கணிக்க முடியாது.சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில், 5.5 லட்சம் கோடி ரூபாய் வரை, சீனா முதலீடு செய்துள்ளது. 'ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை, பாகிஸ்தானிடம் இருந்து திரும்பப் பிடிப்போம்' என, இந்தியா கூறியுள்ளது. அவ்வாறு நடந்தால், சீனா முதலீடு செய்துள்ள, 5.5 லட்சம் கோடி ரூபாய் வீணாகி விடும்.ஏற்கனவே, அவர்கள் பொருளாதார வீழ்ச்சியில் இருக்கின்றனர்.

அங்குள்ள தொழிற்சாலைகள் வெளியேறி உள்ளதால், 25 சதவீதம் தொழிலாளர்கள் வேலை இழந்துஉள்ளனர். பொருளாதார வீழ்ச்சி, உலக நாடுகளின் வெறுப்பு ஆகியவற்றை பெற்றுள்ள நிலையில், சீனா யுத்தம் செய்யுமா என்பது கேள்விக்குறி தான்.ஆனால், சீனா எப்போது, என்ன செய்யும் என்பது, உலக நாடுகள் யாருக்கும் தெரியாது. அவர்கள் நாட்டு மக்களுக்கே, மனித உரிமை கொடுக்காத நாடு அது. அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் என்ன முடிவு எடுப்பரோ, அது தான் நாட்டின் முடிவு. அது, யாருக்கும் தெரியாது.

எந்த தாக்குதலையும் எதிர்கொள்ளவும், பதிலடி தரவும் இந்தியா தயார் நிலையில் இருக்கிறது. சீனா எவ்வளவு ராணுவ வீரர்களை குவித்துள்ளதோ, அதே அளவு ராணுவ வீரர்களையும், இந்தியா களம் இறக்கி உள்ளது. அவர்களின் தரைப்படை அளவிற்கும், இந்தியாவிலும் தரைப்படை தயார் நிலையில் உள்ளது.அவர்கள் பயன்படுத்த தயாராக வைத்துள்ள ஆயுதங்களையும், இந்தியாவும் தயார் நிலையில் வைத்துள்ளது. யுத்தத்திற்கான அனைத்து தயார் நிலையிலும், இந்தியா தயாராகவே உள்ளது.

யுத்தம் என்று வந்தால், அதை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் நிலையில், இந்தியா தயாராக உள்ளது.தற்போது, பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என, சீனா கூறுகிறது. ஆனால், அவர்கள் பேச்சை முழுமையாக நாம் நம்ப முடியாது. அவர்கள் எப்போது, என்ன வேண்டுமானாலும் யுத்தம் செய்யலாம். எனவே, சமரச பேச்சு என்ற வார்த்தையை நம்பக் கூடிய நிலையில், நாம் இல்லை. இரண்டிற்கும் இந்தியா தயாராக உள்ளது.


தற்கொலைக்கு சமம்



எப்போதும் தாக்குதல் நடத்தும் நிலையில் தான், சீனா செயல்படுகிறது. இதற்கு முன், இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான ஒப்பந்தத்தில், பல முறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். ஆனால், அவர்கள் அதை மீறி, 1993, 1996, 2004, 2013, 2014ம் ஆண்டுகளில், தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது, நம் எல்லைக்குள் வந்து, அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்த வண்ணம் இருந்தனர். நாம் பொறுமை கடைப்பிடித்தோம்; நம் பொறுமையை அவர்கள் தவறாக நினைத்து விட்டனர். வரையறுக்கப்படாத எல்லை அது. இதை பேச்சு நடத்துவதன் வாயிலாகவே தீர்த்துக் கொள்ள முடியும். நம் எல்லையை துளியும் விட்டுக் கொடுக்க, நாம் தயாராக இல்லை.

தற்போது, இந்திய ராணுவத்தின் நிலை வேறு. யுத்தம் என்றால், சில நாடுகளின் ஆதரவு வேண்டும். சீனாவிற்கு அந்த ஆதரவு இல்லை. உலக நாடுகளின் நிலை, சீனாவுக்கு எதிராக உள்ளது. இதையும் மீறி, சீனா யுத்தம் செய்தால், தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். நம் படைகள் எப்போதும் தயாராக இருக்கும்; தற்போது அதிக தயார் நிலையில் உள்ளன. போர் என்றால், துணிச்சலுடன் வீரர்கள் போரிடுவர்; சீனாவை விரட்டி, வெற்றிக்கொடி நாட்டுவர்.

தியாகராஜன்
ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல்,
இந்திய ராணுவம்
talk2mmf@gmail.com

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X