பொது செய்தி

இந்தியா

சீனா ராணுவத்தினர், 35 பேர் பலி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

புதுடில்லி; கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலில், சீன ராணுவத்தைச் சேர்ந்த, 35 பேர் உயிரிழந்ததாக, அமெரிக்க உளவு அமைப்புகள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியா - சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளுக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதை நம் ராணுவம் தடுத்தது. கடந்த, ஐந்து வாரங்களுக்கும் மேலாக, இரு படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, பல சுற்று பேச்சு நடந்தன.மோதல்பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கற்களை வீசியும், இரும்பு கம்பிகளால் தாக்கியும், கைகளால் தாக்கியும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில், ஒரு உயரதிகாரி உள்பட மூன்று ராணுவத்தினர் இறந்ததாக, நம் ராணுவம் முதலில் கூறியது. அதன்பிறகு, காயமடைந்த, 17 பேர், கடும் குளிரில் சிக்கியதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்த மோதலில், சீன தரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விபரம் உறுதி செய்யப்படவில்லை. தங்கள் தரப்பில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதை, சீனா மறுத்து வருகிறது.இந்நிலையில், 'இந்திய வீரர்கள் வீரத்துடன் போரிட்டதில், சீன ராணுவத்தைச் சேர்ந்த, 35 பேர் உயிரிழந்திருப்பர்' என, அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், எல்லையில் உள்ள நிலவரம் குறித்து, முப்படைகளின் தலைமை தளபதி, பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன், ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர், அமித் ஷா, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர், நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், ராணுவத் தளபதி, எம்.எம். நரவானே ஆகியோருடன், பிரதமர், நரேந்திரமோடி ஆலோசனை நடத்தினார்.எல்லையில் நடந்த மோதலில் காயமடைந்த, மேலும், நான்கு வீரர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா கருத்துஇந்தப் பிரச்னை குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளதாவது:இந்தியா - சீனா படைகள் இடையே நடந்துள்ள மோதலை, மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு தரப்பும், பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மோதலில், 20 பேர் உயிரிழந்ததாக, இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர்களுடைய குடும்பத்தாருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.பிரச்னையை தணிக்க வேண்டும் என்பதே, இரு நாடுகளின் விருப்பமாக உள்ளது.

தற்போதுள்ள நிலை மாறி, அமைதி ஏற்பட, அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கிறது.இவ்வாறு, அது கூறிஉள்ளது.ஐ.நா., கவலைஇந்தியா - சீனா மோதலுக்கு, ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.'இரு ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதற்கு, பொதுச் செயலர் கவலை தெரிவித்துள்ளார். 'இரு தரப்பும் நிதானத்தைக் கடைப்பிடித்து, பிரச்னைகளை பேசி தீர்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்' என, ஐ.நா., பொதுச் செயலருக்கான செய்தித் தொடர்பாளர், எரிக் கனேகோ கூறியுள்ளார்.

நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தப் பிரச்னை குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த, ஆசிய விவகாரத்துக்கான நிபுணர்கள் கூறியுள்ளதாவது:'கொரோனா' வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், முகத்தில் குத்தி, இந்தியாவை தூண்டி விட்டுள்ளது சீனா.இதற்கு முன்பும், இந்தியா - சீனா இடையே எல்லை தொடர்பாக பல மோதல்கள், முட்டல்கள் இருந்து வந்துள்ளன.

ஆனால், தற்போது இரு நாட்டிலும், தேசியவாதிகள் தலைவர்களாக உள்ளனர். கொரோனா வைரசால் பொருளாதார பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், சீனா, நீண்டகால பிரச்னையை தற்போது கையில் எடுத்துள்ளது துரதிருஷ்டவசமானது.இரு நாடுகளும், இந்தப் பிரச்னையை தணிக்க, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க உள்ளன என்பது, மிகப் பெரிய கேள்வி. அதற்கான முயற்சியில், யார் முதலில் ஈடுபடுவர் என்பதை பார்க்க வேண்டும்.

ஆண்டாண்டு காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வந்துள்ள நிலையில், தற்போது, அது மோதலாக மாறியுள்ளது. தற்போதைக்கு, போர் அபாயம் நீங்கினாலும், இரு நாட்டுக்கும் இடையே புகைச்சல் இருப்பது, கவலை அளிப்பதாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X