சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஓடும் 10க்கும் மேற்பட்ட ஆறுகளை பொதுப்பணித்துறை பராமரிக்காமல் விட்டதால் மழைக்காலத்தில் ஆற்றில் நீர்வரத்தின்றி விவசாயம் சுருங்கி விட்டது.
இம்மாவட்டத்தில் வைகை, பாம்பாறு, பாலாறு, தேனாறு, நாட்டாறு, உப்பாறு, சருகணியாறு, கிருதுமால் நதி, மணிமுத்தாறு, விருசுழியாறு என 10 ஆறுகள் ஓடுகின்றன. இதில், உப்பாறு (சிலம்பாறு) மதுரை அருகே திருவாதவூர் பெரிய கண்மாயில் துவங்கி, சிவகங்கை, மானாமதுரை வழியாக வைகை ஆற்றில் கலக்கிறது.
நாட்டார் கால்வாய் ஆறு ஊத்திக்குளம் பெரிய கண்மாயிலும், சறுகணி ஆறு அலவாக்கோட்டையில் துவங்கி ராமநாதபுரம், ஆர்.எஸ்.,மங்கலம் பெரிய கண்மாயில் சேர்கிறது.மணிமுத்தாறு ஏரியூர்பெரிய கண்மாயில் துவங்கி, பாம்பாற்றில் கலக்கிறது. விருசுழியாறு புதுக்கோட்டை, பொன்னமராவதி முருக்கை கண்மாயில் துவங்கி கல்லல் அருகே பொய்லுார் அணையில் கலக்கிறது.
பாம்பாறு திருப்புத்துார் தாமரைக் கண்மாயில் துவங்கி மணிமுத்தாறாக மாறி வங்கக்கடலில் கலக்கிறது. வைகை ஆறு வருஷநாட்டில் துவங்கி ராமநாதபுரம் பெரிய கண்மாய் வழியே சென்று அழகன்குளம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.இந்த 10 ஆறுகளில் வைகை ஆறு ஒன்று மட்டுமே தற்போது உயிருடன் இருக்கிறது.
மழை காலங்களில் பெய்யும் மழை நீர் இந்த ஆறுகள் வழியே செல்லும். ஆறுகள் செல்லும் வழியில் 968 பொதுப்பணித்துறை கண்மாய், 4 ஆயிரத்து 871 ஒன்றிய கண்மாய்கள் உள்ளன. ஆறுகள் மூலம் நீர் நிரம்பும் கண்மாய்களால் 2 லட்சத்து 83 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன.
மணல் கொள்ளை,முட்புதர் ஆக்கிரமிப்பு
தற்போது ஆறுகளில் மணல் கொள்ளை அதிகரித்து, ஆற்றின் வழித்தடம் பள்ளமாகி விட்டன. மேலும் பொதுப்பணித்துறையினர் பல ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டதால், முட்புதர்கள் ஆற்றில் மண்டிக்கிடக்கின்றன. ஆற்றில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பும் அதிகரித்துவிட்டன. இதனால், ஆறுகள் தடைபட்டு தடம் தெரியாமல் போனது. இது மட்டுமின்றி பாசன மற்றும் வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன.
80 ஆயிரம் ஏக்கராக சுருங்கியது
பாசன நிலத்திற்கு போதிய நீர் வரத்து இன்றி விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். விவசாயத்துறை கணக்கெடுப்பு படி இன்றைக்கு விவசாய பரப்பு 80 ஆயிரம் ஏக்கராக சுருங்கி விட்டன. தொழிற்சாலை, வேலைவாய்ப்பு இல்லாத இம்மாவட்டத்தில் விவசாயமே முதன்மை தொழிலாக நிலைத்து நிற்க, ஆறுகள், குளம், வரத்து கால்வாய், கண்மாய்களை முறையாக பராமரிக்க அரசு முன்வரவேண்டும்.
ஆறுகளுக்கானதடயமில்லை
அய்யனார், ஒருங்கிணைப்பாளர், 5 மாவட்ட பெரியாறு,வைகை பாசன விவசாயசங்கம், சிவகங்கை: மாவட்டத்தில் வைகையை தவிர மற்ற 9 ஆறுகள் இருப்பதற்கான தடயமே இல்லை. ஆக்கிரமிப்பு, மணல் கடத்தல், சீமைக்கருவேல மரங்களால் ஆறுகளின் வழித்தடம், கட்டமைப்புகள் பாதித்துள்ளன.ஆறுகள் முறையான பராமரிப்பின்றி, கண்மாய்கள் வறண்டு, விவசாயம் அழிந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுபடியே சில ஆறுகளில் குறைந்த அளவிலேயே துார்வாரும் பணி நடக்கிறது. மணல் கடத்தலை தடுத்து, ஆறுகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து, ஆறுகளை காப்பாற்ற வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE