பெரியகுளம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொய்த்ததால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 62.64 அடியானது. எனவே குடிநீரை வீணாக்காமல் சிக்கனாக பயன்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை பெரியகுளம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது சோத்துப்பாறை அணை. கொடைக்கானல் மலைப்பகுதி, சோத்துப்பாறை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் இந்த அணைக்கு தண்ணீர் வருகிறது.அணையின் மொத்த உயரம் 126 அடி. அணையின் நீர்மட்டம் 62.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 கனஅடி நீர் வரத்து மட்டுமே உள்ளது.
பெரியகுளம் பகுதிக்கு குடிநீருக்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் நீர் விநியோகிக்கப்படுகிறது. நீர்ப்பிடிப்பில் மழையின்றி அணை நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால் பெரியகுளம் பகுதி மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித்துறை யினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.அணை நீரினால் பெரியகுளம் கண்மாய், தாமரைக்குளம் கண்மாய், பாப்பி பட்டி கண்மாய் பழைய ஆயக்கட்டு பகுதிகளான ஆயிரத்து 825 ஏக்கர் நிலங்களும், லட்சுமிபுரம் பகுதிகள் புதிய ஆயக்கட்டு பகுதிகள் ஆயிரத்து 40 ஏக்கர் நிலங்களுக்கும் பாசன பயன்பெறும். தற்போது அணைநீர்மட்டம் குறைந்துள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE