9 ஆண்டு தவமிருந்து பிறந்த குழந்தை ; ஒரே நாளில் தாயை இழந்த பரிதாபம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

9 ஆண்டு தவமிருந்து பிறந்த குழந்தை ; ஒரே நாளில் தாயை இழந்த பரிதாபம்

Added : ஜூன் 18, 2020
Share
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த நாளிலேயே தாயை இழந்த குழந்தை, பாலுக்கு கதறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த புலிகரம்பலுாரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன், 45. விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். திருமணமாகி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமானார். கடந்த 8ம் தேதி, விருத்தாசலம் அரசு பொது

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த நாளிலேயே தாயை இழந்த குழந்தை, பாலுக்கு கதறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த புலிகரம்பலுாரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன், 45. விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். திருமணமாகி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமானார். கடந்த 8ம் தேதி, விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.நேற்று முன்தினம் பகல் 12:30 மணியளவில், அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கற்பகம், நேற்று மாலை 6:00 மணியளவில் திடீரென இறந்தார்

.விருத்தாசலம் டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜதாமரை பாண்டியன், பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் பொட்டா, கணேசன் உள்ளிட்ட போலீசார், மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.தலைமை மருத்துவர் குலோத்துங்கசோழன் கூறுகையில், 'தைராய்டு நோய் பாதித்த கற்பகம், நீண்ட நாட்களாக மருந்துகள் சாப்பிடாமல் இருந்துள்ளார். அவரை பரிசோதித்து, மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தோம். ஆனால், இங்கேயே சிகிச்சை பெறுவதாக கூறிவிட்டனர். தகுந்த பாதுகாப்புடன் பிரசவம் முடிந்த நிலையில், திடீரென இறந்து விட்டார்' என்றார்.

தாய் இறந்த சில நிமிடங்களில் பாலுக்கு கதறிய குழந்தைக்கு, மருத்துவமனையில் இருந்த மற்றொரு தாய் மூலம் தாய்ப்பால் புகட்டப்பட்டது. பின், பிரேத பரிசோதனை எதுவும் தேவையில்லை என அவரது கணவர் இளஞ்செழியன் எழுதிக் கொடுத்து, மனைவியின் உடலை பெற்றுச் சென்றார். ஒன்பது ஆண்டுகளாக குழந்தை இல்லாமல், தவமிருந்து பெற்ற பிள்ளை, ஒரே நாளில் தாயை இழந்த சம்பவம், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X