நியூயார்க் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் இந்தியா 184 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வேயும் வெற்றி பெற்றன.
ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ரஷ்யா பிரிட்டன் சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள்.மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில் ஆசிய - பசிபிக் பிராந்தியத்துக்கான இடத்துக்கு இந்தியா போட்டியிட்டது. இதில் இந்தியாவுக்கு ஆசிய - பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த சீனா பாகிஸ்தான் உட்பட 55 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் தேர்தலுக்கு முன்பே இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஐ.நா. வின் 193 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிகளும் ஓட்டுப் போடுவதற்கு வசதியாக தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்து.ஒவ்வொரு நாட்டுக்கான நேரத்தை தெரிவித்து ஐ.நா. சபை தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே அனைத்து நாடுகளுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
ஐ.நா. பொதுச் சபை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப் பெட்டியில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் ஓட்டளித்தனர். இந்தியாவுக்கு அமெரிக்க நேரப்படி நேற்று காலை 11:30 மணி முதல் 12:00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அனைத்து நாடுகளும் ஓட்டளித்த பின் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
மொத்தமுள்ள 193 உறுப்பினர்களில், 184 ஓட்டுகள் இந்தியாவுக்கு விழுந்ததையடுத்து, இந்தியா இமாலய வெற்றி பெற்றது. இந்தியாவுடன், அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் வெற்றி பெற்றன. இந்தியா 8வது முறையாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE