கோவை : 'தெருவில் கிடந்ததாக, பெற்ற தாயை கூட்டிச் சென்று முதியோர் இல்லத்தில் விட்டுச் செல்லும் போக்கு குறித்து, இரு நாட்களுக்கு முன், நமது நாளிதழில் வெளியான செய்தி, வாசகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கண்ணீரையும் வரவழைத்தது.
இந்த செய்தி எதிரொலியாக, ஏராளமான பொதுமக்கள் காப்பகத்தில் தங்கியுள்ள முதியவர்களுக்கு, உதவ முன் வந்துள்ளதாகவும், முதியோரை சேர்த்துக் கொள்ளுமாறு, வரும் போன் அழைப்புகள் குறைந்துள்ளதாகவும் கூறுகிறார், 'ஈர நெஞ்சம்' மாநகராட்சி காப்பக அலுவலர் மகேந்திரன்.
இது குறித்து, மகேந்திரன் கூறியதாவது:'தினமலர்' நாளிதழில் செய்தி வந்த பிறகுதான், கோவை மாநகராட்சி சார்பில், ஆதரவற்ற முதியவர்களுக்கு, இப்படி ஒரு இலவச காப்பகம் செயல்படுகிறது என்பதே, பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது. பலர் போனில் அழைத்து, தேவையான உதவிகளை செய்வதாக கூறி உள்ளனர்.வீட்டில் உள்ள முதியவர்களிடம், அன்பு காட்ட வேண்டும் என்ற எண்ணமும், மன மாற்றமும் ஏற்பட்டுள்ளதாக, பலர் போனில் தெரிவித்தனர்.
நிஜமாகவே ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்கள் பற்றிய தகவல்களை, காப்பக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள், போன் செய்து தெரிவித்து வருகின்றனர்.வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம், அன்பு செலுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணம், பலரிடம் ஏற்பட்டுள்ளது. கெம்பட்டிகாலனி மற்றும் தடாகம் ரோட்டில் உள்ள, என்.ஜி.ஆர்., நகரிலும் இதுபோல் மாநகராட்சி முதியோர் காப்பகங்கள் உள்ளன. ஆதரவற்ற முதியோர்கள் இருந்தால், அங்கும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த ஊரடங்கை முன்னிட்டு, 'மகிளா சக்தி கேந்திரா' என்ற மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற முதியவர்கள் கோவையில் எங்காவது இருந்தால், அவர்களை மீட்டு அரசு காப்பகங்களில் சேர்க்க, ஏற்பாடு செய்து இருக்கிறோம். உதவி தேவைப்படுவோர், 1091 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.-தங்கமணிமாவட்ட சமூக நலத்துறை அலுவலர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE