விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு; பணப்பலன்களில் குளறுபடி என புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு; பணப்பலன்களில் குளறுபடி என புகார்

Added : ஜூன் 18, 2020
Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள் திருத்தும் நிறைவு பெற்றது. இறுதி நாளான நேற்று, பணப்பலன்கள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால், ஆசிரியை ஒருவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. இப்பணி மே, 28ல் துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில், ஆறு இடங்களில் விடைத்தாள் திருத்தப்பட்டது. 1,400 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். ஒரு விடைத்தாள் திருத்த, ரூ.10 என்ற விகிதத்தில் வழங்கப்பட்டது. நேற்று மாலை திருத்தப்பட்ட விடைத்தாள்கள் கணக்கிடப்பட்டு, ஆசிரியர்களுக்கு பண பலன்கள் பட்டியலிட்டு வழங்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் மையத்தில் இருந்து, எட்டு கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருப்பவர்களுக்கு மட்டும் பயணப்படி வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. சித்தோடு, தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியை சத்யபிரியா கடந்த, 20 நாட்களாக ஒன்பது கி.மீட்டர் தூரத்தில், திண்டலில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இறுதி நாளான நேற்று சத்யபிரியா, மாமரத்துப்பாளையத்தில் உள்ள முதன்மை மையத்தில் பணியாற்றினார். அம்மையம் அவரது வீட்டில் இருந்து, நான்கு கி.மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. அவருக்கு கடந்த, 20 நாட்கள் பணியாற்றிய பயண தூரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவருக்கு நேற்று பயணப்படி வழங்கவில்லை. ஆத்திரமடைந்து அவர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு முழுமையாக பயணப்படி கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X