மகுடஞ்சாவடி: குடிநீர் குழாயை அடைக்க முயன்ற அதிகாரிகளை, மக்கள் முற்றுகையிட்டனர். இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை ஏரியை திரவ கழிவு மேம்பாடு திட்டப்படி, புனரமைக்கும் பணி நடந்து வருவதால், ஏரியில் தண்ணீர் குறைந்த அளவில் உள்ளது. இதன்மூலம், அருகிலுள்ள ஆழ்துளை குழாய் கிணற்றில், நீர்மட்டம் குறைந்து, மக்கள் தண்ணீரின்றி தவிக்கின்றனர். அதேநேரம், சந்தைப்பேட்டை, புளியம்பட்டி, இளம்பிள்ளையில் சீனிவாசா ஸ்டோர் அருகே உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில், 24 மணி நேரமும், மக்கள் குடிநீர் பிடித்தனர். அதன்மூலம், தண்ணீர் வீணாவதாக கருதிய, காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள், சந்தைப்பேட்டையிலுள்ள குழாயை மூட, 'வெல்டிங்' இயந்திரத்துடன், நேற்று வந்தனர். இதைக் கவனித்த மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், சீனிவாசா ஸ்டோர் அருகே உள்ள குழாயை அடைக்க முயன்றபோது, மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். ஆனால், அதிகாரிகள் குழாய்க்கு பூட்டுபோட்டனர். மகுடஞ்சாவடி போலீசார், மக்களை சமாதானப்படுத்தி, கலைந்து போகச்செய்தனர்.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: வீரபாண்டி, சேலம், பனமரத்துப்பட்டி பகுதிகளுக்கு செல்லும் பிரதான காவிரி குடிநீர் குழாயில், முறையற்ற இணைப்பு மூலம், 24 மணி நேரமும் பலர் குடிநீர் பிடிப்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் அளவு குறைந்துள்ளது. அதை முறைப்படுத்த, அந்த குழாய்க்கு பூட்டு போடப்பட்டுள்ளது. சாவி, திட்ட பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள், காலை, மாலையில், தலா, 2 மணி நேரம் மட்டும், பூட்டை திறந்து, குடிநீர் வினியோகிப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
20 குடும்பம் தவிப்பு: ஆத்தூர், முதலாவது வார்டு, கோட்டையைச் சேர்ந்த, 20 குடும்ப பெண்கள், நேற்று மதியம், 12:00 மணிக்கு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 'காவிரி குடிநீர், மேடான பகுதியில் உள்ள, எங்களின், 20 குடும்பங்களுக்கு வரவில்லை. பலமுறை புகார் செய்தும் சீரமைப்பு பணி மேற்கொள்ளவில்லை' எனக்கூறி, குடிநீர் பிரிவு அலுவலர்களிடம், பெண்கள் வாக்குவாதம் செய்தனர். நகராட்சி அலுவலர்கள், 'சீரான குடிநீர் வழங்க, குழாய் பகுதிகள் சரிசெய்யப்படும்' என உறுதியளித்ததால், பெண்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE