ஆட்சியை பிடிச்சுடலாம்!
'பரவாயில்லையே.., நம் ஆட்களும் சாமர்த்தியமாகத் தான் அரசியல் செய்கின்றனர் என, கேரள மாநில காங்., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா பற்றி பெருமையுடன் பேசுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள். கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளதால், அடுத்த தேர்தலில் நமக்கு தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என கனவில் மிதந்தனர், காங்., கட்சியினர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில், முதல்வர் பினராயி விஜயனும், அவரது நிர்வாகமும் தீயாக செயல்பட்டு, பாதிப்பை பெருமளவில் கட்டுப்படுத்தினர். இதற்காக, கேரள மக்கள், முதல்வரையும், அவரது அரசையும் மனதார பாராட்டுகின்றனர். ஆட்சி கனவில் மிதந்த காங்., கட்சியினரோ, 'இந்த கொரோனா வைரஸ், நம் பதவி ஆசையில் மண்ணை அள்ளி போட்டு விட்டதே' என, புலம்பினர். தற்போது இவர்களுக்கு அரசியல் செய்ய, அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கேரள அரசு மின் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய சென்னிதலா, 'இரவு, 9:00 மணிக்கு, மாநிலத்தில் உள்ள அனைவரும், மூன்று நிமிடம் மின் விளக்குகளை அணைத்து, மின் கட்டண உயர்வுக்கு எதிரான, நம் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிப்போம்' என, அறிவித்தார். அவரது அழைப்பை ஏற்று, கேரள மக்கள் பெரும்பாலானோர், மின் விளக்குகளை அணைத்தனர். காங்., கட்சியினரோ, 'ரமேஷ் சென்னிதலா புண்ணியத்தில் ஆட்சியை பிடித்து விடலாம்' என, மகிழ்ச்சியில்
மிதக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE