கண்டமங்கலம் : கண்டமங்கலம் காவல் நிலையம் எதிரே உள்ள பாழடைந்த தரைக் கிணற்றால் வாகனங்கள், கால்நடைகள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.
விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் புதிய போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாலையோரம் தனியாருக்குச் சொந்தமான தரைக்கிணறு உள்ளது. இந்த கிணற்றின் மூலம் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. ஆனால் 10 ஆண்டு களுக்கு மேலாக இந்த கிணறு பயன்பாட்டில் இல்லாமல் பாழ்பட்டுக் கிடக்கிறது. கிணற்றை யொட்டி அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய சாலையாக இருந்தது. பின்னர் இந்த சாலை 10 மீட்டர் சாலையாகவும், 12 மீட்டர் சாலையாகவும் அகலப்படுத்தப்பட்டது.
பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 14 மீட்டர் சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. இதனால் கிணறு சாலையின் அருகில் உள்ளது.பாழடைந்த இந்த கிணற்றை சுற்றிலும் பராமரிப்பு இல்லாமையால் பல ஆண்டுகளாக மரம், செடி, கொடிகள் முளைந்து புதர்மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகள், இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் தரைக்கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. கிணறு மீண்டும் பயன்படுத்த முடியும் என்றால் கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். கிணற்றை இனி பயன்படுத்த முடியாது எனில் கிணற்றை மூட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE