புதுடில்லி: எல்லைப் பிரச்னையால் பதற்றம் நிலவி வரும் நிலையில், நம் அரசு துறைகள் மற்றும் வங்கிகளின் இணைய தளங்களை முடக்கும் முயற்சியில், சீன இறங்கியது தெரிய வந்துள்ளது; உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதற்றத்தை தணிக்க, பேச்சு நடந்து வருகிறது.
இந்நிலையில், நம் அரசு துறைகள் மற்றும் வங்கி இணைய தளங்களை முடக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உரிய நேரத்தில், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 1990களில் இருந்தே, இணையதளத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தன் ராணுவத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 'சைபர் வார்' எனப்படும், இணைய வழிப் போரை நடத்த, சீனா ஏற்பாடுகளை செய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களில், நம்முடைய அரசு துறைகள் மற்றும் வங்கிகளின் இணையதளங்களை முடக்க, முயற்சி நடந்துள்ளது.

சீனாவின் செங்க் டு நகரில் இருந்து, இந்த முயற்சி நடந்துள்ளது. இங்கே தான், சீன ராணுவத்தின், இணைய வழிப் போர் பிரிவு செயல்படுகிறது. இதற்கு முன்பும், பல நாடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் இணையதளங்களை முடக்கும் நடவடிக்கைகளில், இந்த பிரிவு ஈடுபட்டுள்ளது. கடந்த, 2006ல் இருந்து, இதுபோன்ற இணையப் போரில், இந்தப் பிரிவு ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, தைவான் என, சீனா கைவரிசை காட்டிய நாடுகளின் பட்டியல் மிக நீளமானது. தற்போது, டி.டி.ஓ.எஸ்., எனப்படும் சேவைகளை முடக்கும் யுக்தியை, சீனா கையாண்டு வருகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தில் வழங்கப்படும் சேவையைப் பெறுவதற்கு, பலர் விண்ணப்பிப்பர்.
ஆனால், செயற்கையாக மிக அதிக அளவில் பயன்பாடு உள்ளது போல் காட்டி, அந்த இணைய தள சேவையை முடக்குவதே, சீனாவின் யுக்தி. அது போன்ற முயற்சியைத் தான், நம் நாட்டிலும் மேற்கொண்டது. எல்லையை பாதுகாக்கும் அதே நேரத்தில், சீனாவின் இதுபோன்ற மறைமுக போர் யுக்திகளையும் சமாளிக்கும் திறன் நமக்கு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE