தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு: எல்லை பகுதி கண்காணிப்பில் 'கோட்டை' விடும் அதிகாரிகள்

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மக்கள், ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களில் வருவதால், சேலம் மாவட்டத்தில், 'கொரோனா' தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதேநேரம், மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தாமல், வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை அனுமதிப்பதால், தொற்று பரவுவது வேகமெடுத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில், சேலம், ஆத்தூர் சுகாதார மாவட்டங்கள் உள்ளன. அதில், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 'கொரோனா' பரவலை தடுக்க, மாவட்ட எல்லையான, சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை, நத்தக்கரையில், சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, மருத்துவர் உள்பட, 20 பேர், எட்டு மணி நேர சுழற்சி அடிப்படையில் பணிபுரிகின்றனர். அவர்கள், அந்த வழியாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் வருவோரை பரிசோதிக்கின்றனர். அதேபோல், பெரம்பலூர் மாவட்ட எல்லை, வீரகனூர் அருகே லத்துவாடி; காரிப்பட்டியில் அடிமலைபுதூர், மாசிநாயக்கன்பட்டி; பாப்பநாயக்கன்பட்டியில் கோபாலபுரம்; தம்மம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட், தண்ணீர்பந்தல்; பனமரத்துப்பட்டியில் மல்லூர் என, ஏழு இடங்களில், சோதனைச் சாவடி மையங்கள் உள்ளன. இதேபோல், சேலம் சுகாதார மாவட்டத்திலும், பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில், தொற்று அதிகரித்துள்ளதால், அங்கு வாடகை கூட செலுத்த முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள், பணியாளர்கள், சொந்த ஊருக்கு, பைக்கில் வருகின்றனர். பலர் சரக்கு வாகனங்கள், சரக்கு லாரிகளில் பயணித்தும் வருகின்றனர். பைக்கில் வருவோர், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை தவிர்த்து, கிராமப்புற சாலைகளில் சொந்த ஊருக்கு சென்றுவிடுகின்றனர். சரக்கு வாகனங்களை அதிகாரிகள் யாரும் சோதனை செய்வதில்லை. இரு வாரமாக, சென்னையில் இருந்து வருவோர் அதிகரிப்பால், சேலம் மாவட்டத்தில், 'கொரோனா' தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம், 25 பேர், நேற்று, 16 பேர் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 271 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலிருந்து, விழுப்புரம், கடலூர் வழியாக, சேலம் வர, பல்வேறு வழிகள் உள்ளன. மாவட்ட எல்லையில் பணிபுரியும் போலீசார் மற்றும் அரசு துறை அதிகாரிகள், இருசக்கர வாகனங்களில் வருவோரை போதிய விசாரணையின்றியும், பல இடங்களில் கண்டுகொள்ளாமலும் விடுவதே, தொற்று அதிகரிப்புக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. நெடுஞ்சாலையில் மட்டும் கண்காணிக்கின்றனர். அவர்களின் கண்காணிப்பை மீறி, நகருக்குள் எளிதாக வரும் நிலை உள்ளது. மாவட்ட எல்லை மட்டுமின்றி, நகருக்குள் வரும் எல்லையிலும்,அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதேநிலை தொடர்ந்தால், சேலம் மாவட்டத்தில், தொற்றை தடுப்பது மிகவும் சிக்கலாகும் நிலை ஏற்படும்.

மக்கள் ஒத்துழைப்பு இல்லை: இதுகுறித்து, சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்த மக்கள் ஒத்துழைப்பு, தற்போது இல்லை. வெளியே வரும்போது முகக் கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியின்றி, சரக்கு வாகனங்களில் கூட்டமாக செல்கின்றனர். இறுதி ஊர்வலம், சடங்கு, திருமண நிகழ்ச்சியில் கூட, கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில்லை. இப்படி அலட்சியமாக இருந்ததால், தற்போது ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. இனியாவது, ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும். நம்மை நாமே பாதுகாப்பதோடு, மற்றவருக்கு நோய் பரவாமலும் தடுக்க முடியும். பொருளாதார நடவடிக்கைக்கு, அரசு, ஊரடங்கில் தளர்வு செய்துள்ளது. அதை சாதகமாக பயன்படுத்த கூடாது. மீன், காய்கறி மார்க்கெட் பகுதிகளில், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவசர தேவைக்கு, சென்னை மட்டுமின்றி, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, 'இ - பாஸ்' மூலம் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு கொடுக்கும் உத்தரவாதத்தை கடைப்பிடித்து தனிமைப்படுத்திக் கொள்வதில்லை. இதனால், சேலம் மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா நீங்கும் வரை, தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல், அரசின் அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X