2,300 ஆண்டுக்கு முந்தைய கல்லறை, கொல்லு பட்டறை: கொடுமணலில் தொடர்ந்து கிடைக்கும் பொக்கிஷம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2,300 ஆண்டுக்கு முந்தைய கல்லறை, கொல்லு பட்டறை: கொடுமணலில் தொடர்ந்து கிடைக்கும் 'பொக்கிஷம்'

Added : ஜூன் 19, 2020
Share

சென்னிமலை: கொடுமணலில் நடக்கும் அகழாய்வில், 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை மற்றும் கொல்லு பட்டறை கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, நொய்யல் நதி கரையில் அமைந்துள்ள கொடுமணலில். பல கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடந்தது. தற்போது தமிழக தொல்லியல் துறை திட்ட இயக்குனர் ரஞ்சித் தலைமையில், உதவி இயக்குனர் தொல்லியலாளர் நந்தகுமார் உள்பட, 50க்கும் மேற்பட்டோர், ஒரு மாதமாக அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர். இதில், 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள், கருவிகள் மற்றும் அணிகலன்கள் தயாரித்த கொல்லு பட்டறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தொல்லியல் துறை திட்ட இயக்குனர் ரஞ்சித், நேற்று கூறியதாவது: அகழாய்வு பணியில், 250 இடங்களில் இடுகாடு என்றும், 'பரியல்' என்றும் சொல்லப்படுகிற கல்லறைகள் (பெருங்கற்கால ஈமச்சின்னம்) இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லறையை சுற்றிலும், பெரிய அளவிலான கற்கள் வட்டமாக வைக்கப்பட்டுள்ளன. ஒரு கல்லறையை தோண்டி ஆய்வு செய்தபோது, 6 மீ., நீளம், 2 மீ., அகலம் மற்றும் 1 மீ., ஆழத்தில் முற்றத்துடன் கூடிய, இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு அறையில் உடலை எரித்த பின் கிடைத்த எலும்புகளையும், மற்றொரு அறையில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துள்ளனர். கல்லறையின் முன், பின்பகுதியில் பெரிய கற்களை நட்டு வைத்துள்ளனர். இதனால் இந்த ஒரு கல்லறை மட்டும், முக்கிய நபரின் கல்லறையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதனருகில் ஈமச்சடங்கு செய்ய வைத்திருந்த, 10 மண்பானைகள் மண்ணில் புதைந்து காணப்படுகின்றன.

வாழ்வியல் பகுதியில் அகழாய்வு செய்தபோது, கருவிகள், அணிகலன்கள் தயார் செய்வதற்கான கொல்லுபட்டறை இயங்கியதும், செம்பு, இரும்பை உருக்கி எடுத்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டது. இரண்டு பச்சைக்கற்கள், சிறிய அளவில் இரண்டு தங்க துண்டு, உடைந்த மண்பானை, பாசிமணிகள் மற்றும் விலங்கு ஒன்றின் தலைப்பகுதி எலும்பு கிடைத்துள்ளது. கல்லறைகள், கொல்லு பட்டறைகள், 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X