'நம்பிக்கைக்கு ஒரு அளவு வேண்டாமா... ரொம்ப ஓவராகத் தான் போறீங்க' என, கேரள மாநில, பா.ஜ., தலைவர், கே.சுரேந்திரனை கிண்டலடிக்கின்றனர், அங்குள்ள மார்க்சிஸ்ட் மற்றும் காங்., கட்சியினர். கேரளாவில் என்ன தான் தலைகீழாக நின்றாலும், பா.ஜ.,வால் தேர்தலில் வெற்றி பெறவே முடியவில்லை. பா.ஜ., நடத்தும் போராட்டங்கள், கடை அடைப்பு ஆகியவற்றுக்கெல்லாம், கேரள மக்கள் பெரும் ஆதரவு தருகின்றனர்.தேர்தலில் மட்டும் கைவிரித்து விடுகின்றனர். புதுப் புது வியூகங்களை செயல்படுத்தி பார்த்தும், 'அனைத்தும் வியூகங்களும் தோற்றுப் போகின்றனவே' என, புலம்புகிறார் சுரேந்திரன். இந்த சமயத்தில் தான், தேர்தல் வெற்றிக்கு புது வியூகத்தை வகுத்து கொடுத்துள்ளனர், சுரேந்திரனின் ஆதரவாளர்கள். கேரளாவில், பா.ஜ., தலைமை அலுவலகம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. 'இந்த கட்டடத்தின் வாஸ்து சரியில்லாதது தான், நம் தொடர் தோல்விகளுக்கு காரணம். அலுவலகத்தை வேறு கட்டடத்துக்கு மாற்றிப் பாருங்கள்; நமக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவியும்' என, சுரேந்திரனிடம் கூறியுள்ளனர், அவரது விசுவாசிகள். சுரேந்திரனோ, 'இதைப்பற்றி நான் சிந்திக்கவே இல்லையே' என, உடனடியாக அலுவலகத்துக்கு வேறு இடம் பார்க்கும் பணியை முடுக்கி விட்டுள்ளார். மற்ற கட்சியினரோ, 'வாஸ்து தோஷமாவது, மண்ணாங்கட்டியாவது; தேர்தல் வேலை செய்யாமல், 'ஏசி' அறைக்குள் இருந்தபடியே அரசியல் செய்தால், எத்தனை கட்டடத்துக்கு மாறினாலும் வெற்றி கிடைக்காது' என, கிண்டலடிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE