பெங்களூரு: லடாக் மோதல் விவகாரத்தையடுத்து, சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்பதை மத்திய அரசு ஆதரிக்கக்கூடாது என முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல் ஒலித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து, தேவகவுடா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: லடாக் சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதை நான் வரவேற்கிறேன். எதிர்கட்சிகள் கட்டுப்பாடற்ற முறையில் பேசிவிடக்கூடாது. உள்நாட்டு அரசியலையும், தேசப் பாதுகாப்பையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது.

சீனப்பொருட்களை புறக்கணிப்போம் என்ற குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்கக்கூடாது. யதார்த்த வழியில் நாம் நடக்க வேண்டியது அவசியம். அதேசமயம் தேசியவாதத்தின் குரலை குறைத்துக் கொள்ளவேண்டும். ஆத்திரம், கோபம், பழிவாங்கும் உணர்வை தூண்டுவது போல் பேச இது சரியான நேரம் அல்ல.
லடாக் சம்பவத்தில், சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான பல தகவல்கள் வருவது வேதனையளிக்கிறது. அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ராணுவத்தை அரசியல்ரீதியாகப் பயன்படுத்தப்பார்க்கும் சம்பவங்கள் ஆபத்தானது. ராணுவத்தினரை தேசப்பணியாற்றும் செயலுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும்.
எல்லையில் இந்திய வீரர்கள் எவ்வாறு வீர மரணம் அடைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி, உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE