நல்லபடியாக ஓய்வு பெற முடியாது: அதிகாரிகளை மிரட்டிய அ.தி.மு.க., கவுன்சிலர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நல்லபடியாக ஓய்வு பெற முடியாது': அதிகாரிகளை மிரட்டிய அ.தி.மு.க., கவுன்சிலர்

Added : ஜூன் 20, 2020
Share

ஓமலூர்: ''கேள்வி கேட்டு, முறையாக பதில் தராவிட்டால், நல்லபடியாக ஓய்வு பெற முடியாது,'' என, ஆளுங்கட்சி கவுன்சிலர், ஒன்றிய குழு கூட்டத்தில், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றிய குழு கூட்டம், பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை வகித்தார். 43 பொருட்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், 15வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் ரமேஷ் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தல் செலவின தொகையை, ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்கக்கூடாது. அப்பொருளை நிராகரிக்க வேண்டும். அதேபோல், நோய் தடுப்பு நடவடிக்கைக்கு, பல லட்சம் ரூபாய் மதிப்பில், முக கவசம், லைசால் வாங்கியதாக பொருள் உள்ளது. அது தொடர்பாக, கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஆறு மாதத்தில், ஒன்றிய வரவு செலவு கணக்கை உடனே ஒப்படைக்க வேண்டும். நாங்கள் கேட்பதற்கு, நீங்கள் முறையான பதில் தராவிட்டால், ஒழுங்காக வேலை செய்யமுடியாது. நல்லபடியாக ஓய்வு பெறவும் முடியாது. இவ்வாறு அவர் பேசினார். இதனால், அதிகாரிகள், அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். பி.டி.ஓ.,கருணாநிதி பேசுகையில், ''ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி தலைவர்களிடம் முறையாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. இனி, கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கப்படும், அனைத்து செலவுக்கும் முறையாக கணக்கு உள்ளது,'' என்றார். பின், ஆறு கவுன்சிலர்கள் அங்கீகரிப்பதாகவும், ஒன்றிய குழு தலைவர் உள்பட, 12 கவுன்சிலர்கள், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாகவும் கையெழுத்திட்டனர். மொத்தமுள்ள, 19 கவுன்சிலர்களில், 19வது வார்டு கவுன்சிலர் குருசேவ், ஒரு வழக்கில் சிக்கியுள்ளதால், கூட்டத்துக்கு வரவில்லை.

வெளியேற்றம்: கூட்டம் தொடங்கும் முன், கவுன்சிலர்களின் கணவர்கள், கூட்ட அறையில் இருந்தனர். அங்கு வந்த பி.டி.ஓ., கருணாநிதி, கவுன்சிலர், அலுவலர்களை தவிர, மற்றவர்கள் இருக்க கூடாது எனக்கூறினார். இதனால், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், முணுமுணுத்தபடி வெளியேறினர். தொடர்ந்து, தலைவர் மாரியம்மாளின் கணவர் ரவி வர, அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால், சிறிது நேரம் வாக்குவாதம் செய்து விட்டு வெளியேறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X