டிசி கேட்டு தனியார் பள்ளிக்கு பெற்றோர் படையெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டிசி' கேட்டு தனியார் பள்ளிக்கு பெற்றோர் படையெடுப்பு

Added : ஜூன் 20, 2020
Share

சேலம்: பள்ளி திறக்க, இன்னும் சில மாதம் ஆகலாம் என்பதால், மாற்றுச்சான்றிதழ் கேட்டு, தனியார் பள்ளிகளுக்கு, பெற்றோர் படையெடுக்கின்றனர்.
தமிழகத்தில், கடந்த மார்ச் முதல், கொரோனா பரவலை தடுக்க, பள்ளிகள் திறக்கப்படவில்லை. தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு அதிகரித்ததால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், மீண்டும், 12 நாள் முழு ஊரடங்கு பிறப்பித்ததால், மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. இதேநிலை, மற்ற மாவட்டங்களுக்கும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனால், நடப்பாண்டு முழுதும் பள்ளி திறப்பு குறித்தோ, தொழில் வளர்ச்சிக்கோ வாய்ப்பில்லை என்ற எண்ணம், மக்கள் இடையே உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆன்லைன் வகுப்பை காரணம் காட்டி, தனியார் பள்ளிகள், ஒரு புறம் கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்துகின்றன.

இதுகுறித்து, சில பெற்றோர் கூறியதாவது: கொரோனாவால், அனைத்து தொழில்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவுளி உள்ளிட்ட தொழில், பழைய நிலைக்கு திரும்ப, பல மாதமாகலாம். இதனால், வேலையின்றி இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை, பல குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், சில மாதமே பள்ளி நடத்தப்போகின்றனர். அதற்கு, பல ஆயிரம் கட்டுவதற்கு பதில், அரசு பள்ளியில் சேர்த்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை. தொழில் நல்ல நிலைக்கு வரும்போது, மீண்டும் தனியார் பள்ளியில் சேர்க்கலாம் என்ற முடிவில், மாற்றுச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கிறோம். ஆனால், அரசு உத்தரவு வரும் வரை, மாற்றுச்சான்றிதழ் வழங்க முடியாது என தனியார் பள்ளிகள் மறுக்கின்றன. இதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X