பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: 13 ஆலைகள் மீது நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: 13 ஆலைகள் மீது நடவடிக்கை

Added : ஜூன் 20, 2020
Share

ஈரோடு: ஈரோடு பகுதியில், 550க்கும் மேற்பட்ட சாய, சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. ஆலைகளில், 'பூஜ்ய' நிலை சுத்திகரிப்பு அமைப்பு இருந்தாலும், சுத்திகரிக்காமல் கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். காளிங்கராயன் வாய்க்காலில் கலந்து காவிரி ஆற்றிலும், நேரடியாக காவிரி ஆற்றிலும், கழிவுநீர் கலந்து, குடிநீர் விஷமாகிறது. இதுபற்றி விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம், ஈரோடு மற்றும் நாமக்கல் கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த, 15 நாட்களாக ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை, மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வில், 12 சாய, சலவை ஆலைகள், ஒரு தோல் ஆலை, கழிவு நீரை வெளியேற்றுவதையும், அளவுக்கு அதிகமாக தேக்கி வைத்திருப்பதையும் உறுதி செய்து, மின் இணைப்பை துண்டித்தனர். இரண்டு ஆலையில் உற்பத்தியை நிறுத்தினர். அனுமதியின்றி செயல்பட்ட ஒரு ஆலையின், ஒரு பகுதியை மட்டும் இடித்து அகற்றினர். காவிரி மற்றும் காளிங்கராயன் கால்வாயின் அருகே வயல், வாழைத்தோட்டங்கள், பெரிய சுற்றுச்சுவர் கொண்ட கட்டடங்களுக்குள்ளும் சாய, சலவை துணிகளை அலசி, கழிவு நீரை வெளியேற்றுவது வாடிக்கையாகி வருகிறது. அவ்விடங்களையும் ஆய்வு செய்ய, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X