உதவி கமிஷனர், லாட்டரி வியாபாரிகளுக்கு கொரோனா: சேலத்தில் 85 போலீசார் தனிமை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதவி கமிஷனர், லாட்டரி வியாபாரிகளுக்கு கொரோனா: சேலத்தில் 85 போலீசார் 'தனிமை'

Added : ஜூன் 20, 2020
Share

சேலம்: சேலம் மாநகர போலீசின் தெற்கு உதவி கமிஷனர், லாட்டரி வியாபாரிகள், மூன்று பேருக்கு கொரோனா உறுதியானதால், 85 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சேலம், தாதகாப்பட்டி, பில்லுக்கடையைச் சேர்ந்தவர் ரகு, 50. இவரது, 34 வயது மகன், இவரது மனைவி ரூபா, 30, ஆகிய மூவரும், விதவை, வறுமையில் வாடும் பெண், கணவரை பிரிந்து வாழும் பெண்களை வளைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக எழுந்த புகாரில், கடந்த மே, 28ல் போலீசார் கைது செய்தனர். அதில், 34 வயதுடையவருக்கு நடந்த சோதனையில் கொரோனா உறுதியானதால், அவரிடம் விசாரணை நடத்திய, தெற்கு உதவி கமிஷனர் உள்பட, 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், யாருக்கும் தொற்று உறுதியாகாத நிலையில், 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அந்த உதவி கமிஷனருக்கு, ஒரு வாரமாக காய்ச்சல், தலைவலி ஏற்பட்டதால், நேற்று முன்தினம், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அதில், கொரோனா உறுதியானதால், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் பணிபுரிந்த, 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஈரோட்டில் நீதிபதியாக பணிபுரியும், உதவி கமிஷனரின் மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டார். அன்னதானப்பட்டி போலீசார், லாட்டரி விற்றதாக, 40, 48 வயதுடைய இரு ஆண்களை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களுக்கு நடந்த சோதனையில், தொற்று உறுதியானதால், இன்ஸ்பெக்டர் உள்பட, 18 போலீசாருக்கு, நேற்று, பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டனர்.


அதேபோல், கிச்சிப்பாளையம் போலீசாரும், லாட்டரி விற்றதாக, 54 வயது முதியவரை கைது செய்தனர். அவருக்கும் தொற்று உறுதியானதால், அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் உள்பட, 18 பேர், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் தவிர, குற்றவாளிகளை பிடிப்பதில், முக்கிய பங்கு வகிக்கும் தனிப்படையினர், 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரே நாளில், மாநகர போலீசில், 85 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X