சென்னை : பல மாவட்டங்களில், கொரோனா ஒழிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள, தனிமை முகாம்களில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை. கழிப்பறை உட்பட எதுவுமே சுத்தமாக இல்லை. கண்காணிப்பாளர்கள், அடிப்படை சுகாதாரமற்ற இடங்களை கொடுத்து, பொது மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.
இதற்கு, மாவட்ட கலெக்டர்களே முழு பொறுப்புஎன்பதால், மாவட்ட வாரியாக உள்ள, தனிமை முகாம்களை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்கும் செல்வோரை, தனிமை முகாம்களில் அடைத்து, மாவட்ட நிர்வாகங்கள் கெடுபிடி நடவடிக்கைகள் மேற்
கொள்கின்றன.
ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் உள்ள சோதனைச் சாவடிகளில், வருவாய் துறை, போலீஸ், சுகாதாரத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் அமர்ந்து, வாகனங்களை மடக்கி சோதிக்கின்றனர். வாகனங்களில் இருந்து, பொது மக்களை கீழே இறக்கி, சமூக விரோதிகளை பிடிப்பது போல, கடுமை காட்டுகின்றனர்.பின், தனிமை முகாம்களுக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என, அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது.
தொற்றுச் சூழல்
சமூக பரவல் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டு உள்ள தனிமை முகாம்களில், குறைந்தபட்சம், 50 முதல், 500 பேர் வரை, மொத்தமாக அடைக்கப்படுகின்றனர். இங்கு, 10 பேருக்கு, ஒரு அறை, 20 பேருக்கு, ஒரு ஹால் என, ஒதுக்கப்படுகிறது. பல ஊர்களில் இருந்தும் வந்தவர்கள், ஒரே அறையில் தங்க வைக்கப்படுவதால், கொரோனா தொற்று பரவுவதற்கு, அதிக வாய்ப்புகள், தனிமை முகாம்களில் ஏற்படுகின்றன.பல முகாம்களில், அறைகள் சுத்தமாக இல்லை. கதவுகள், ஜன்னல்கள் இன்றியும், கதவுகள் உடைந்தும், மிக மோசமாக காணப்படுகின்றன. வெறும் தரையில் தான் படுக்க வேண்டும். சிலர் கூடுதல் பணம் கொடுத்து, பாய், தலையணை வாங்கி கொள்கின்றனர்.
கழிப்பறைகளில் ஆபத்து
அறைகளில் குப்பையை அகற்றி, சுத்தமாக வைத்திருப்பதை விட, 'பிளீச்சிங்' துாளை கொட்டுவதையும், அங்கு தங்கியிருப்பவர்கள் மீது, கிருமி நாசினியை பீய்ச்சி அடிப்பதும் தான், அவர்களின் சுகாதாரப் பணி. அதனால், பலருக்கும் தும்மல், இருமல் பாதிப்பு ஏற்படுகிறது. அனைவருக்கும் பொது கழிப்பறைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் கொரோனா கிருமி, வெகு வீரியம் கொண்டு வாழும் தன்மையுடையதாகி விடும் அளவு, மிகவும் அசுத்தமாக இருக்கின்றன.பல நேரங்களில், தண்ணீர் வசதியே இருப்பதில்லை. பொது மக்கள் எடுத்துச் செல்லும் தண்ணீர் பாட்டில்களை தான் பயன்படுத்த வேண்டும். கழிப்பறைகளில் தரைகள் உடைந்து, அனைத்து தொற்று வியாதிகளும் பரவும் வாய்ப்பு உள்ளது.
முகாம்களுக்குள் வரும் பொது மக்கள், அந்த வளாகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் படுக்கலாம், நடக்கலாம்; கூட்டமாக அமர்ந்து பேசலாம்.வருவாய் துறையினரும், சுகாதாரத் துறை ஆய்வாளர்களும், வளாக கதவை மூடி, வெளியே காவல் இருக்கின்றனர். தாசில்தார்கள், காரில் சுற்றி சுற்றி வந்து செல்கின்றனர்.
நிர்வாக குளறுபடி
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும், மாவட்ட கலெக்டர்களின் உத்தரவுப்படி மேற்கொள்வதாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். கலெக்டர்கள், இந்த நிர்வாக குளறுபடிகளை தெரிந்து கொள்ளாதது ஏன் என்ற, கேள்வி எழுந்துள்ளது. புகார் வந்தால், விசாரணை செய்வதும் இல்லை. மொபைல் போனில் ஆணையிடுவதுடன், அவர்களின் பணி முடிந்து விடுகிறது. 'இது, கலெக்டர் ஆர்டர்' என, ஊழியர்களும், அதிகாரிகளும், மக்களை பாடாய் படுத்துகின்றனர்.'எங்கேன்னு சொன்னா, சரியா செய்து தருகிறோம்; அடையாளம் காட்டுங்கள்' எனக் கேட்பதைத் தவிர்த்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனிமை முகாம்களுக்கு பணியாட்களை அனுப்பி, எல்லா வசதிகளையும் ஏற்படுத்த வேண்டியது, கலெக்டர்களின் பொறுப்பு.
சோதனைக்கு அலைக்கழிப்பு
முகாம்களுக்கு வந்தவர்களுக்கு, இரண்டு நாள், மூன்று நாள் கழித்த பின்பே, மருத்துவ சோதனை மேற்கொள்கின்றனர். இந்த சோதனையிலும், குழந்தைகள் உட்பட முதியோரை, பல மணி நேரம் நிற்க வைத்து, 'இந்த மையம் வா, அந்த மையம் வா' என, அலைக்கழிக்கின்றனர்.கொரோனா பரவலுக்கு தொடுதல் தான், முதல் எதிரியாக உள்ள நிலையில், சோதனைக்கு வருவோர், ஒரே கோப்பையை எடுத்து, அதில் தண்ணீர் எடுத்து, கைகழுவி விட்டு செல்ல வேண்டும். இதன் காரணமாக, தொற்றுடன் வருபவரின் கைகளில் இருந்து, தொற்று இல்லாமல் உள்ளவருக்கு பரவும் ஆபத்தும் உள்ளது.
குடிநீர் வசதி இல்லை
பெரும்பாலான முகாம்களில், உணவு, குடிநீர் வசதி இல்லை. இரண்டு மடங்கு கட்டணம் கொடுத்தால், வருவாய் துறையினர் ஏற்பாடு செய்துள்ள நபர்கள், வாங்கி வருவர். வருவாய் துறை, சுகாதாரத் துறை மற்றும் போலீசுக்கு தெரிந்த குடும்பத்தினர் வந்தால், அவர்களுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பு நடக்கிறது. தங்களுக்கு தெரிந்த குடும்பத்தினரை, முகாம்களில் பெயரை மட்டும் பதிவு செய்து விட்டு, அவர்களின் வீட்டுக்கு அனுப்பி விடும் விதிமீறல்களும் நடக்கின்றன.
கிரிமினல்களா மக்கள்?
சோதனைச் சாவடியிலும், தனிமை முகாம்களிலும் பணியில் உள்ள போலீசார், தனிமை முகாம் வரும் மக்களை, சமூக விரோதிகளை போல அணுகும் நிலை உள்ளது.பெண்கள், வயோதிகர்கள், சிறுவர் - சிறுமியர் என்றாலும், அவர்களையும் மிரட்டுவது போல கேள்விகள் கேட்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE