மோடியின் அமைதிக்கு பொருள் என்ன?

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மோடியின் அமைதிக்கு பொருள் என்ன?

இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில், நம் ராணுவத்தினர், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும், 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாயினர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, தினமும் அரசின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் என, பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இப்படி நடக்கும் கூட்டங்கள், படு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. யாருக்குமே இதைப் பற்றி தெரிவதில்லை. இப்படி ரகசியமாக நடந்த ஒரு ஆலோசனையில், மோடியும், அமித் ஷாவும் மட்டுமே இருந்தனராம். பிரதமர் வீட்டில் நடந்த இந்த சந்திப்பு, இரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை சென்றதாம். என்ன செய்யலாம்; எந்த முறையில் பதிலடி கொடுப்பது என, பல விஷயங்கள் அலசப்பட்டதாக சொல்லப்படுகிறது. விடியற் காலை, 3:௦௦ மணிக்கு தான் முடிந்தது இந்த ஆலோசனை. அதன் பிறகு தான் வீட்டிற்கு சென்றாராம், அமித் ஷா.மறுநாள், பா.ஜ.,வின் சீனியர் தலைவர்களிடம் பேசிய அமித் ஷா, 'சீனா விஷயத்தில் பிரதமர் சும்மா இருக்க மாட்டார்; பொறுத்திருந்து பாருங்கள்' என சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி மேலும் எந்த விபரங்களையும் தலைவர்களிடம் தெரிவிக்கவில்லையாம், அமித் ஷா.'முக்கியமான விஷயங்களில், பிரதமர் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்தால், ஏதாவது நடக்கப் போகிறது என அர்த்தம். மோடியின் அமைதி அப்படிப்பட்டது தான்' என்கின்றனர், சீனியர் தலைவர்கள். 'பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது போல, சீனாவிலும் நடக்குமா; அது சாத்தியமா' என்றெல்லாம் டில்லி அரசியல் வட்டாரங்களில் பேச ஆரம்பித்துவிட்டனர். 'ஏதோ உள்ளுக்குள்ளாகவே நடந்து கொண்டிருக்கிறது' என சந்தேகிக்கின்றனர், தலைவர்கள்.


சீனாவை விமர்சிக்ககாங்., தயங்குவது ஏன்?இந்தியா- - சீனா மோதலுக்கு பின், மோடியைக் கடுமையாக விமர்சித்து வருகிறது, காங்கிரஸ். சோனியாவும், ராகுலும் தினமும் அறிக்கை வெளியிட்டு, பிரதமரை கேள்வி கேட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் மோடியின் மதிப்பை குறைக்க, இதுதான் நல்ல சமயம் என, காங்., கருதுகிறது. அதற்கு ஏற்ப, 'சரியாக செயல்படாமல், இந்திய எல்லைப் பகுதியை சீனாவிற்கு விட்டுக் கொடுத்துவிட்டார் மோடி' என, ராகுல் சொல்லி வருகிறார். அனைத்து கட்சி கூட்டத்தில், சோனியாவும் மோடியை விமர்சித்துஉள்ளார். ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் சீனாவை கண்டனம் செய்துள்ளன. ஆனால், காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும், இந்த விஷயத்தில் அடக்கி வாசித்து வருகின்றன.சீனாவை அதிகம் காங்கிரஸ் சாடாமல் இருக்க காரணம் உள்ளது என்கின்றனர், பா.ஜ.,வினர். 'காங்கிரசும், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், ௨௦௦௮, ஆகஸ்டில், ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. இரு கட்சி களும் கருத்து பரிமாற்றம், ஒத்துழைப்பு என, இந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டு உள்ளது' என்கின்றனர், பா.ஜ.,வினர். அந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 'இந்த ஒப்பந்தத்தில், காங்கிரஸ் தரப்பிலிருந்து கையெழுத்திட்டது, ராகுல்; சீனா கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கையெழுத்திட்டது, ஜி ஜின்பிங். இப்போது இவர்தான் சீனாவின் அதிபர். இதனால் தான், சீனாவிற்கு எதிராக பேசாமல், காங்., அடக்கி வாசிக்கிறது' என்கின்றனர், பா.ஜ., கட்சியினர். ஆனால், இதற்கும் காங்., பதிலடி கொடுத்துள்ளது. '௧2 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, தங்களுடைய தவறை, பா.ஜ., மறைக்கப் பார்க்கிறது' என, காங்., கூறுகிறது.


பேத்தியை பார்க்கஅமித் ஷாவுக்கு தடைஉள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, இரண்டாவது பேரக் குழந்தை பிறந்துள்ளது. தாத்தாவான அமித் ஷா, தன் பேத்தியை கையில் எடுத்து கொஞ்ச முடியவில்லை. அமித் ஷாவின் மகனுக்கு குழந்தை பிறந்தது, ஆமாபாதில். அமித் ஷாவோ, டில்லியில் இருக்கிறார். ஊருக்கு சென்று பேத்தியைப் பார்க்க ஆசைப்பட்டார், அமித் ஷா. ஆனால், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் அதிரடிப் படையின் தலைவர், 'நீங்கள் ஊருக்குப் போகக் கூடாது' என, அமித் ஷாவிற்கு கட்டளையிட்டு விட்டார்.

'குஜராத்தில், குறிப்பாக ஆமதாபாதில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், பேரக்குழந்தையை பார்க்க, ஆமதாபாத் சென்றால், அமித் ஷாவிற்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. 'தினமும் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுபவர், அமித் ஷா. இதனால், பிரதமருக்கும் பிரச்னை ஏற்படும்' என, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., அமைப்பு கறாராக கூறிவிட்டது. இதனால், பேத்தி பாசத்தை, தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளார், அமித் ஷா.இருப்பினும், தினமும் காலையில், வீடியோ மூலமாக பேத்தியைப் பார்த்துவிட்டு தான், வேலைகளைத் துவங்குகிறாராம் அமித் ஷா.


மன்மோகன் வீட்டில்ஒட்டப்பட்ட, 'நோட்டீஸ்'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டில்லியில், அரசு பங்களாவில் வசிக்கிறார். சமீபத்தில், இவர் வீட்டு வாசலில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது. 'இந்த வீட்டில் கொரோனா தொற்று உள்ளது. யாரும் உள்ளே போகக் கூடாது' என, புதுடில்லி முனிசிபல் கமிட்டி, அந்த நோட்டீசில் சொல்லியிருந்தது. இ ந்த நோட்டீஸ், டில்லி அரசியல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'மன்மோகன் சிங்கிற்கு கொரோனாவா... அவர் வயதானவர். அதோடு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். என்னாகுமோ...' என, கவலையடைந்தனர். விசாரித்த போது, 'மன்மோகன் சிங் நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அவருடைய உதவியாளர்களில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது' என, தெரிந்தது.இந்த உதவியாளர், மன்மோகன் சிங் வீட்டு சுற்றுச்சுவரிலேயே உள்ள, ஒரு குடியிருப்பில் வசிக்கிறார். அதனால் தான் வீட்டு வாசலில், நோட்டீஸ் ஒட்டப்பட்டது என்கின்றனர், அதிகாரிகள். இருப்பினும், மன்மோகன் சிங் எச்சரிக்கையாகவும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என, அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர்.


பிரியங்காவை வெளியேற்றகுறி வைக்கும் பா.ஜ.,


காங்., பொதுச் செயலரும், சோனியாவின் மகளுமான பிரியங்கா, டில்லி வி.ஐ.பி., பகுதியில், அரசு பங்களாவில், தன் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். பிரியங்காவுக்கு, டில்லியில் சொந்தமாக தனி வீடு உள்ளது. இருப்பினும், அரசு ஒதுக்கிய பங்களா, நல்ல இடத்தில் இருப்பதால், அங்கேயே வசிக்கிறார். அரசு பங்களாவில், ஆறு பெரிய அறைகள்; புல்வெளி தோட்டம் என, பெரிதாக உள்ளது. சில மாதங்களுக்கு முன், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு குழு அமைப்பால் கொடுக்கப்பட்ட பாதுகாப்பை, மத்திய பா.ஜ., அரசு திரும்ப பெற்றது. இதற்கு பதிலாக, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. எஸ்.பி.ஜி., அமைப்பு, பிரதமரின் பாதுகாப்பை கவனித்து வருகிறது.பிரியங்கா தங்கியுள்ள அரசு பங்களாவுக்கு, வாடகை, 700 ரூபாய் தான். இதையும், எஸ்.பி.ஜி., அமைப்பு கொடுத்து வந்தது. இந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட பிறகு, எல்லாமே மாறிவிட்டது. பிரியங்கா, அரசின் எந்த பதவியிலும் இல்லை; எம்.பி.,யாகவும் பதவி வகிக்கவில்லை. இதனால், அவருக்கு அரசுபங்களா ஒதுக்க முடியாது. இதுவரை எஸ்.பி.ஜி., பாதுகாப்பு கொடுத்த காரணத்தால், அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. இனி, அரசு பங்களாவுக்கு, வெளி மார்க்கெட்டில் என்ன வாடகை கிடைக்குமோ, அதை பிரியங்கா செலுத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. குறைந்த பட்சம், 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை இருக்கும் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஒரு கடிதமும், அரசு தரப்பிலிருந்து பிரியங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வாடகை அதிகமானதால் அரசு பங்களாவை காலி செய்வதா என குழப்பத்தில் இருக்கிறார், பிரியங்கா. ஆனால், 'பிரியங்காவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் தான், பா.ஜ., முனைப்பாக இருக்கிறது' என்கின்றனர், காங்கிரசார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
27-ஜூன்-202010:19:41 IST Report Abuse
Sandru இங்கு அமைதிக்கு பம்முதல் என்று பொருள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X