புதுடில்லி: இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில், நம் ராணுவத்தினர், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும், 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாயினர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, தினமும் அரசின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் என, பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இப்படி நடக்கும் கூட்டங்கள், படு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. யாருக்குமே இதைப் பற்றி தெரிவதில்லை. இப்படி ரகசியமாக நடந்த ஒரு ஆலோசனையில், மோடியும், அமித் ஷாவும் மட்டுமே இருந்தனராம். பிரதமர் வீட்டில் நடந்த இந்த சந்திப்பு, இரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை சென்றதாம். என்ன செய்யலாம்; எந்த முறையில் பதிலடி கொடுப்பது என, பல விஷயங்கள் அலசப்பட்டதாக சொல்லப்படுகிறது. விடியற் காலை, 3:௦௦ மணிக்கு தான் முடிந்தது இந்த ஆலோசனை. அதன் பிறகு தான் வீட்டிற்கு சென்றாராம், அமித் ஷா.

மறுநாள், பா.ஜ.,வின் சீனியர் தலைவர்களிடம் பேசிய அமித் ஷா, 'சீனா விஷயத்தில் பிரதமர் சும்மா இருக்க மாட்டார்; பொறுத்திருந்து பாருங்கள்' என சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி மேலும் எந்த விபரங்களையும் தலைவர்களிடம் தெரிவிக்கவில்லையாம், அமித் ஷா. 'முக்கியமான விஷயங்களில், பிரதமர் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்தால், ஏதாவது நடக்கப் போகிறது என அர்த்தம். மோடியின் அமைதி அப்படிப்பட்டது தான்' என்கின்றனர், சீனியர் தலைவர்கள்.
'பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது போல, சீனாவிலும் நடக்குமா; அது சாத்தியமா' என்றெல்லாம் டில்லி அரசியல் வட்டாரங்களில் பேச ஆரம்பித்துவிட்டனர். 'ஏதோ உள்ளுக்குள்ளாகவே நடந்து கொண்டிருக்கிறது' என சந்தேகிக்கின்றனர், தலைவர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE