மதுரை: மதுரையில் கொரோனா 'தீயாக'பரவி வருகிறது. அரசு இன்னொருமுறை முழு ஊரடங்கை அமல்படுத்தினாலும், இல்லையென்றாலும் பொதுமக்களே வெளியே வராதீர். சென்னை நிலை மதுரைக்கு ஏற்படாமல் இருக்க இதுவே ஒரே வழி.
சென்னையில் ஆரம்பத்தில் தினமும் பாதிப்பு 100 என்று தான் இருந்தது. பின்னர் தினமும் 1300 பேர் வரை பாதிக்கப்பட்டனர். மதுரையிலும் தற்போது தினமும் 80 முதல் 100 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். மதுரையின் பரப்பளவை ஒப்பிடும் போது, இதுவும் சென்னை பாதிப்பு போன்றது தான். இப்படியே போனால் சில வாரங்களில் மதுரைக்கும் அந்த நிலை வரும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். அந்த நிலை வந்தால் மதுரை தாங்காது என்பதை மதுரை மக்கள் நன்கறிவர்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒரு வாரமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமாகியுள்ளன. முதல் தொற்று உறுதி செய்யப்பட்டதிலிருந்து 3 மாதங்களில் ஏற்பட்ட மொத்த பாதிப்பு, இரண்டு வாரங்களில் ஏற்பட்டுள்ளது என்றால் கொரோனாவின் கோரப்பிடியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மதுரையில் பரிசோதனை செய்யும் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. எனவே எந்த அறிகுறியும் இல்லாதவர்களும், அறிகுறி உள்ளவர்களும் பொது இடங்களில் நடமாடக்கூடும். ஐந்து நாட்களாகத்தான் சென்னையில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகின்றனர். அதற்கு முன்பு வந்தவர்கள், அவர்களுக்கு நோய் தொற்று இருக்கிறது என்பதை தெரியாமலே வெளியே நடமாடலாம். இவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்வதும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வதும் அவசியம்.
காய்கறி, பழ மார்க்கெட், ரயில் நிலையம், விமான நிலையம் என மதுரையை மையப்படுத்தியே சுற்றியுள்ள மாவட்டங்கள் இயங்குகின்றன. மதுரைக்கு வந்து, வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகம். எனவே இரு வாரங்களுக்கு பிற மாவட்டத்தினர் மதுரை வருவதோ, மதுரை மக்கள் பிற மாவட்டத்திற்கு செல்வதையோ தவிர்க்க வேண்டும்.அறிகுறி இருப்பவர், அறிகுறி இல்லாதவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள், வெளியூரில் இருந்து வந்து சோதனை செய்யாதவர்கள் என பலதரப்பினரும் வெளியே கூட்டம் கூட்டமாக அலைவதால் நோய் தொற்று வேகமாக பரவுகிறது.
பொது இடங்களில், பஸ்களில், மார்க்கெட்டுகளில், ஆட்டோக்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. வெளியே அலைபவர்களில் பாதிப் பேருக்கு முகக்கவசம் இல்லை. அப்படி இருந்தாலும் இருவர் சந்தித்து பேசும் போது, முகக்கவசத்தை தாழ்த்தி விட்டு பேசுகின்றனர். நமது வாயில் இருந்து வெளியே வரும் நீர்த்திவலைகள் மூலமாகத்தான் கொரோனா பரவுகிறது என்ற அடிப்படை அறிவு கூட நமக்கு இன்னும் வரவில்லை என்பது வருத்தமானதே.

முக்கவசம் அணியவில்லை என அரசு அபராதம் விதித்தாலும் யாரும் திருந்தவில்லை. மக்களிடம் பொறுப்புணர்வு இருந்தால் தான் இந்த நோயை விரட்ட முடியும். கொரோனாவின் கொடுமை குறித்து ஒவ்வொரு தனிநபருக்கும் விழிப்புணர்வு வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை, 60 வயதிற்கு மேற்பட்டவர்களை, 10 வயதிற்குட்பட்டவர்களை கொரோனா விரைவாக தாக்கும். அதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவும். வீட்டில் உள்ள ஒருவர் வெளியே சென்று கொரோனா 'வாங்கி' வந்தால், அது ஒட்டுமொத்த குடும்பத்தையே ஒட்டிக்கொள்ளும் அபாயம் தான் கொரோனாவின் உச்சம்.
எனவே கொஞ்ச நாட்களுக்கு மிக அவசியம் ஏற்பட்டால் மட்டும் முக்கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள். அதிலும் குடும்பத்தில் ஒருவர் மட்டும் செல்லுங்கள். மற்றவர் வீட்டிலேயே இருங்கள்; வெளியே வராதீர்கள். இதனால் பாதிப்புகள் பல இருந்தாலும், அதை விட மனித உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் விழிப்புணர்வோடு கொரோனாவை விரட்டுவோம்.
மதுரைக்கு வருது 7 நாள் முழு ஊரடங்கு
கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த, சென்னை போல் இன்னொரு முழு ஊரடங்கு மதுரைக்கு தேவை என ஜூன் 20 தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மதுரை மாவட்டத்தில் ஜூன் 23 நள்ளிரவு 12:00 முதல் ஜூலை 1 காலை 6:00 மணி வரை ஏழு நாள் முழு ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பான அறிவிப்பு இன்று(ஜூன் 22) வெளியாகலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE