சென்னை: தமிழகத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, உடுமலை சங்கர் கவுரவ கொலை வழக்கில், அவரது மனைவி, கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, குமரலிங்கத்தைச் சேர்ந்தவர், வேலுசாமி. இவரது மகன், சங்கர், 22; உடுமலை, தனியார் பொறியியல் கல்லுாரியில் படித்து வந்தார்.தன்னுடன் படித்த, பழநியைச் சேர்ந்த, கவுசல்யா, 19, என்பவரை காதலித்து, 2015 ஜூலை, 12ல் திருமணம் செய்தார்.இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கவுசல்யா குடும்பத்தினர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2016 மார்ச், 13ல், உடுமலை பஸ் ஸ்டாண்டு அருகே, பட்டப்பகலில் இருவரையும் சுற்றி வளைத்த கும்பல், சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா, தீவிர சிகிச்சைக்குப் பின் பிழைத்தார். இ

ந்தக் கொலை சம்பவ காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கை விசாரித்த போலீசார், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டிதுரை, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், தமிழ் கலைவாணன், மதன், ஸ்டீபன் தனராஜ், பிரசன்னா குமார், மற்றொரு மணிகண்டன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட், அளித்த தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன் , மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகியோருக்கு 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தன்ராஜ் என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் உறவினர் பிரசன்னா ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளும், 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து போலீசாரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட், கவுசல்யாவின் தந்தைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுவித்ததுடன், மற்ற 5 பேரின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தது. 3 பேர் விடுவித்ததற்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பு தொடர்பாக குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய கவுசல்யா, இந்த தீர்ப்பு மூலம் எங்களுக்கு அநீதி தான். சங்கரின் ரத்தத்திற்கு நீதி கிடைக்கவில்லை. சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கிற்கும் எனக்கும் மிகவும் தூரமாக இருந்தது. சின்னச்சாமியும், அன்னலட்சுமியும் குற்றவாளி இல்லை என்றால், சங்கர் உயிருடன் இருந்து என்னுடன் வாழ்ந்திருப்பார். நாங்கள் சுப்ரீம் கோர்ட் செல்வோம். சட்ட போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE