சென்னை: முதல்வர் இபிஎஸ்.,க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு நெகடிவ் முடிவுகள் வந்ததாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத வைரஸை எதிர்த்து களத்தில் நின்று முன்கள பணியாளர்கள் போராடி வருகின்றனர். கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தமிழக அரசின் வியூகமாகும். ஐசிஎம்ஆர் அனுமதியுடன் 87 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. அதன்மூலம் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை எட்டியுள்ளோம். இதுவரை மொத்தம் 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று ஒரே நாளில் 1,358 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 32,754 ல் இருந்து 34,112 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 55 சதவீதமாக உள்ளது. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரியால் ஏற்பட்டுள்ள பேரிடரை கணிக்க வல்லுநர்கள் திணறும் நிலை உள்ளது. கடவுளுக்கு தான் தெரியும் என முதல்வர் கூறியது எதார்த்தமானது. இயற்கை பேரிடர்கள் வந்துவிட்டு போய்விடும். அதற்கு நேரம் நிர்ணயித்து நம்மால் மீட்பு பணி செய்ய முடியும். மக்களிடையே பதற்றம் வேண்டாம் அதேநேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கொரோனா ஒழிவது குறித்து கடவுளுக்கு தான் தெரியும் என முதல்வர் கூறியது யதார்த்தமான கருத்து தான். அதனால் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது. அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டக்கூடாது. எந்த ஆக்கப்பூர்வமான தகவல்களை கூறினாலும் அரசு கேட்க தயாராக உள்ளது. பாதிப்புகள் இரட்டிப்பாக 15 நாட்களுக்கு மேல் உள்ளது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளது.
முதல்வருக்கு சோதனை
முதல்வர் இபிஎஸ் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் நெகடிவ் வந்தது. சென்னை மருத்துவக் கல்லூரி டீன், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா பாதிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக வெளியிட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE