சென்னை : ''சென்னையில், 1.20 லட்சம் வீடுகள் கண்காணிக்கப்படுகின்றன. இதனால், ஐந்து நாட்களுக்கு பின், நல்ல பலனை எதிர்பார்க்கலாம்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறினார்.
இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டி:
சென்னையில், வீடு வீடாக, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, களப் பணியாளர்கள் உள்ளனர். வார்டுக்கு, இரண்டு மருத்துவ முகாம் என்ற அடிப்படையில், 500க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள், தினமும் நடத்தப்படுகின்றன.கொரோனா பரிசோதனை செய்தவர்கள், பாதித்தவர்கள், குணமடைந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள், அறிகுறி உள்ளவர்கள் என, 18 வகையானவர்கள், தனிமைப்படுத்தப்பட உள்ளனர். தற்போது, 1.20 லட்சம் வீடுகள், கண்காணிப்பில் உள்ளன. இந்த எண்ணிக்கை, 2.50 லட்சமாக உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதன்படி, தொற்று பாதித்த மற்றும் பாதிக்க வாய்ப்புள்ள, 8 லட்சம் நபர்கள், மாநகராட்சி கண்காணிப்பில் வருகின்றனர்.
அவர்கள் வாயிலாக, பெரிய அளவிலான தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும்.தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய, 4,000 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா சிறப்பு மையங்களில், 17 ஆயிரத்து, 500 படுக்கை வசதிகள் உள்ளன.
தற்போது, அண்ணா பல்கலையில், 2,000 படுக்கை வசதி, சென்னை ஐ.ஐ.டி.,யில், 2,200 படுக்கை வசதி, ஒரு வாரத்தில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.மேலும், அத்திப்பட்டு பகுதியில் உள்ள, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், 4,500 படுக்கை வசதி ஏற்படுத்தப்படுகிறது.சென்னையில், 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இதுவரை, 7,500 தெருக்களில் மட்டுமே பாதிப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக, பெரிய அளவிலான தொற்று கண்டறியப்படவில்லை. நகராட்சியின் இதுபோன்ற நடவடிக்கையால், வரும், ஐந்து நாட்களுக்கு பின், கணிசமான அளவில் தொற்று பரவல் குறையும்.இவ்வாறு, கமிஷனர் பிரகாஷ் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE