ஆளுங்கட்சி புள்ளி... உத்தரவிட்டாராம் நிறுத்தச் சொல்லி!

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
கோவை, முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றிக் கொண்டிருப்பதாக, சித்ரா மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. உடனே, ஸ்கூட்டரில், சித்ராவும், மித்ராவும் விரைந்தனர்.கார்ப்பரேஷன் டவுன் பிளானிங் ஆபீசரிடம், கம்யூ., கட்சியினர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அதை கவனித்த சித்ரா, ''மித்து, கம்யூ., கட்சி 'மாஜி' கவுன்சிலர் ஒருத்தரு, குளக்கரையில் எட்டு வீடு கட்டி,
 ஆளுங்கட்சி புள்ளி... உத்தரவிட்டாராம் நிறுத்தச் சொல்லி!

கோவை, முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றிக் கொண்டிருப்பதாக, சித்ரா மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. உடனே, ஸ்கூட்டரில், சித்ராவும், மித்ராவும் விரைந்தனர்.கார்ப்பரேஷன் டவுன் பிளானிங் ஆபீசரிடம், கம்யூ., கட்சியினர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அதை கவனித்த சித்ரா, ''மித்து, கம்யூ., கட்சி 'மாஜி' கவுன்சிலர் ஒருத்தரு, குளக்கரையில் எட்டு வீடு கட்டி, வாடகைக்கு விட்டிருந்தாராம். ஆதார் அட்டையை ஆதாரமா காட்டுனா, மாற்று வீடு ஒதுக்குறாங்க. ஒருத்தருக்கு ஒரு வீடுதான், 'அலாட்மென்ட்' வாங்க முடியுது. நிறைய வீடு கட்டி, வாடகைக்கு விட்டவங்க, பரிதவிப்புல இருக்காங்க,''

''ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவா, கம்யூ., - எம்.பி., நடராஜன், தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்திக் வந்துட்டு போனாங்க. அதிகாரிங்க அசைஞ்சு கொடுக்கலை. 'மாஜி' எம்.எல்.ஏ., ஆறுமுகமும் ஆதரவாளரோடு வந்திருக்காரு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் புது வீடு கொடுத்தாச்சு; காலி செய்த வீடுகளையே இடிக்கிறோம்னு, அதிகாரிகள் சொன்னதும், 'கப்-சிப்'ன்னு, திரும்பிப் போயிட்டாராம்,''

''அதிருக்கட்டும், கார்ப்பரேஷன் ஆபீசுல டவுன் பிளானிங் செக்சனே கலகலத்து போயிருக்காமே,''
''அதுவா, டவுன் பிளானிங் செக்சன்ல ஏகப்பட்ட அப்ளிகேசன் பெண்டிங்ல இருந்திருக்கறதா, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு புகார் போயிருக்கு. 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியதும், பைல் இருக்கற இடத்தை 'போட்டு' கொடுத்துட்டாங்களாம். ஒரே நாள்ல, 80 பைல் கையெழுத்தாச்சாம். இந்த விவகாரத்துல, நான்கெழுத்து ஊழியரை, 'சவுத்' ஜோனுக்கு மாத்திட்டாங்க,''
''கார்ப்பரேசன்ல ஒவ்வொரு ஆபீசருக்கும், எவ்ளோ உதவியாளர்கள் இருக்காங்கன்னு 'லிஸ்ட்' எடுத்திருக்காங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். டீ வாங்கிக் கொடுக்க மூணு பேர் வச்சிருந்த உதவி கமிஷனர், ஒருத்தரை மத்திய மண்டலத்துக்கும், இன்னொருத்தரை மேற்கு மண்டலத்துக்கும் திருப்பி அனுப்பிட்டார்.

இதேமாதிரி, கார்ப்பரேஷன்ல இருக்கற உதவியாளர்களை கணக்கெடுத்து, மூணு வருஷத்துக்கு மேலே ஒரே இடத்துல இருக்கறவங்களை, மண்டலம் விட்டு மண்டலம், செக்சன் விட்டு செக்சன் மாத்துனா நல்லாயிருக்கும்னு பேசிக்கிறாங்க,'' ''அதிருக்கட்டும், கார்ப்பரேஷன் விழாவுக்கு வந்த வி.ஐ.பி., 'அப்செட்' ஆகிட்டாராமே,'' ''அதுவா, 'ஸ்மார்ட் சிட்டி' ஸ்கீமில், குறிச்சி குளத்தை மேம்படுத்தப் போறாங்க. குறிச்சியிலும், குனியமுத்துாரிலும் பூமி பூஜை போட்டாங்க. வார்டுக்கு ரெண்டாயிரம்னு, 14 வார்டு மக்களுக்கு வீடு வீடா போயி, 28 ஆயிரம் 'இன்விடேசன்' கொடுத்திருக்காங்க. விழாவுக்கு, 200 பேருதான் வந்திருந்ததால, 'அப்செட்' ஆகிட்டாராம்,''

''என்னக்கா, இப்படி சொல்றீங்க. ஊரெல்லாம், 'கொரோனா' வைரஸ் பரவிட்டு இருக்கு. கூட்டம் சேரக்கூடாதுன்னு சொல்றாங்க; சமூக இடைவெளியை பின்பற்றணும்னு அறிவுரை சொல்றாங்க. இவுங்களே, 'இன்விடேசன்' அச்சடிச்சு, அழைப்பு விடுத்தாங்களா,'' ''ஆமா மித்து, ஆளுங்கட்சி வி.ஐ.பி., கலந்துக்கிற எந்த விழாவா இருந்தாலும், கூட்டத்துக்கு குறைவிருக்காது. சமூக இடைவெளியை பின்பற்றவே மாட்டாங்க. விழாவுக்கு வர்றதுல யாருக்காவது நோய் பாதிப்பு இருந்தா, எல்லோருக்கும் பரவிடும்ங்கிற பயம் இல்லாம, ஆளுங்கட்சிக்காரங்க சுத்துறாங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை, 'ஆன்' செய்தாள் சித்ரா.

''ஸ்மார்ட் சிட்டி விழாவை துவக்கி வைக்க, நம்மூருக்கு சி.எம்., வரப்போறாராமே,'' என, கேட்டாள் மித்ரா.''ஆமாப்பா, வர்ற, 25ம் தேதி அழைச்சிட்டு வர்றதுக்கு, 'பிளான்' போட்டிருக்காங்க. ஆனா, குளக்கரையில வேலை இன்னும் முழுசா முடியலை,''''கார்ப்பரேசன் லிமிட்டுல மழை நீர் வடிகால் தரமில்லாம கட்டுறதா புகார் கெளம்பியிருக்காமே,''''அடடே, எல்லா தகவலும் விரல் நுனியில் வச்சிருக்கியே...'' என பாராட்டிய சித்ரா, ''வழக்கமா, மழை நீர் வடிகாலுக்கு மூணு பக்கம், கான்கிரீட் போடுவாங்களாம். ஆனா, கமிஷன் கொடுத்துட்டு, ரெண்டு பக்கம் மட்டும் போடுறாங்களாம்.

கள ஆய்வு செய்ய வேண்டிய, 'ஞானமுள்ள' இன்ஜி., கண்டுக்கறதில்லையாம். 'ஸ்மார்ட்' இன்ஜி., புகைப்பட ஆதாரத்துடன், துறை தலைவரிடம் புகார் கொடுத்திருக்காரு. இன்ஜி., செக்சன்ல பரபரப்பா பேசிட்டு இருக்காங்க,'' என்றபடி, சித்தி விநாயகர் கோவில் அருகே, ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.அருகில் உள்ள டீக்கடைக்குள் நுழைந்த இருவரும், காளான் பப்ஸ், லெமன் டீ ஆர்டர் கொடுத்தனர்.காளான் பப்சை சுவைத்த மித்ரா, ''வடவள்ளி ஏரியாவுல கஞ்சா சேல்ஸ் அமர்க்களப்படுதாம்.

வாட்டர் டேங்க் ஏரியாதான், சேல்ஸ் பாயின்ட்டாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ரெண்டு கோஷ்டிக்குள்ள அடிதடியே நடந்திருக்காம். மாமூல் வாங்கிட்டு, போலீஸ்காரங்க கண்டுக்கறதில்லையாம்,''''மித்து, அந்த ஸ்டேஷன் அதிகாரி, 'செட்டப் செல்லப்பா' ரேஞ்ச்சுக்கு மாறிட்டாராம்,'' என்ற சித்ரா, ''கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் போறதுக்கு தடையிருக்கு. இருந்தாலும், பாரஸ்ட் ஆபீசர்களிடம் பர்மிஷன் வாங்கி, லேடி போலீசார் ஜாலியா என்ஜாய் பண்ணியிருக்காங்க,'' என்றாள்.

டேபிளுக்கு லெமன் டீ வந்ததும், அதை எடுத்து உறிஞ்சிய மித்ரா, ''அக்கா, நம்மூர் பாரஸ்ட் அதிகாரிங்க மெத்தனமா இருக்கறதா, ஒரு குற்றச்சாட்டு இருக்கு. பக்கத்து ஸ்டேட்டுல, அவுட்டுக்காய் வெடிச்சு, கர்ப்பிணி யானை செத்தது, எவ்ளோ பிரச்னையாச்சு. நம்மூர்ல அடிக்கடி யானை செத்துப் போகுது. இதுவரைக்கும் ஒருத்தரை கூட, பாரஸ்ட் அதிகாரிங்க கைது செய்யாம, ஏதாச்சும் சொத்தை காரணத்தைச் சொல்லி, சமாளிக்கிறாங்க,'' என, அங்கலாய்த்தாள்.

டீ குடித்து விட்டு, பேக்கரியில் இருந்து இருவரும் வெளியேறினர். நடைபாதையில் நின்றிருந்தவர்கள், கமிஷன் வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.அதைக்கேட்ட சித்ரா, ''அன்னுார் ஏரியாவுல, கவர்மென்ட் வேலை செய்ற கான்ட்ராக்ட்காரங்களிடம், ஆளுங்கட்சி பிரமுகர், 14 சதவீதம் கமிஷன் கேக்குறாராம்; தொகுதிக்குள்ள என்ன வேலை நடந்தாலும், பர்சன்டேஜ் வந்தாகணும்னு சொல்றாராம். 'நபார்டு' வேலைக்கும் கேக்குறராம். கமிஷன் கொடுக்காததால, ரெண்டு மாசமா வேலை செய்ய விடாம, தடுத்து நிறுத்திட்டாராம். கான்ட்ராக்ட்காரங்க புலம்பித் தள்ளுறாங்க...'' என்றாள்.

மித்துவின் 'மொபைல்போன்' மணி ஒலித்தது. எடுத்துப்பேசிய மித்ரா, ''யாரு, 'தன'மா? 'பால்' வாங்கிட்டு அப்பவே கிளம்பிட்டாளே...'' எனக்கூறி 'கட்' செய்தவள், ''பிளிச்சி ஊராட்சியில ஆறு லேடி கவுன்சிலர் இருக்காங்க. இந்த ஊராட்சியில, கணவர்கள் ராஜ்ஜியம் நடக்குது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த மன்ற கூட்டத்திலும், அனைத்து கவுன்சிலர்களது கணவர்களும் கலந்துக்கிட்டாங்களாம். இதுசம்பந்தமா, ஏற்கனவே கலெக்டர், 'வார்னிங்' பண்ணியிருக்காரு. அதை கண்டுக்காம செயல்படுறாங்களாம்,''

''மித்து, மறுபடியும் 'கொரோனா' பரவல் அதிகமாயிடுச்சே,'' என, கவலைப்பட்டாள் சித்ரா.''ஆமாக்கா, இ-பாஸ் இல்லாம ஏகப்பட்ட பேரு, நம்மூருக்குள் நுழைஞ்சிட்டாங்க. செக்போஸ்ட்டுல தடுத்தாலும், ஏதாச்சும் பொய் காரணம் சொல்லி, வந்திடுறாங்க. இப்போதைக்கு, 'பாசிட்டிவ்' ரிசல்ட் வர்ற இடத்தை மட்டும் அதிகாரிங்க, 'சீல்' வைக்கிறாங்க. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மட்டுமே, நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்னு, 'ஹெல்த் ஆபீசர்ஸ்' சொல்றாங்க. ஆனா, ஆளுங்கட்சி தரப்புல, சி.எம்., வரவழைச்சு விழா நடத்துறதுக்கு, 'பிளான்' போடுறதுனால, நிர்வாகத் தரப்புல தயங்குறாங்க,'' ''முழு ஊரடங்கு போடுற அளவுக்கு, பாதிப்பு அதிகமாயிடுச்சா, என்ன?'' ''யெஸ்! நாளுக்கு நாள் அதிகமாயிட்டு போகுது.

மொபைல் கடை உரிமையாளர் குடும்பத்துக்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கு; சின்னியம்பாளையத்துல ஜவுளிக்கடை லேடீஸ்க்கு வந்திருக்கு. சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக ஊழியருக்கு, நோய் தொற்று இருக்கறதா தகவல் பரவியிருக்கு; மற்ற ஊழியர்கள் வேலைக்கு போறதுக்கு தயங்குறாங்க. 'இன்கம்டாக்ஸ்' அலுவலக ஊழியருக்கு, காய்ச்சல் பாதிப்பு இருந்ததா சொல்லி, ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போனாங்க. அலுவலகம் முழுக்க கிருமிநாசினி தெளிச்சிருக்காங்க. ஆனா, நோய் தொற்று இருக்கான்னு சுகாதாரத்துறையினர் உறுதியா சொல்ல மறுக்குறாங்க. பீளமேடு, ஹோப் காலேஜ் ஏரியாவுல இருந்தும் ஆஸ்பத்திரிக்கு சிலரை அழைச்சிட்டு போயிருக்காங்களாம்,''''ஓ... அப்படியா, இனி, வெளியே வர்றது பாதுகாப்பு இல்லை போலிருக்கே,'' என்றபடி, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X