சென்னை: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை (ஜூன் 24) காலை முதல்வர் இபிஎஸ் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்து வந்த தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொடர்ந்து அதிக பாதிப்புகளை சந்திக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் சமீப நாட்களாக தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரையில் இன்று (ஜூன் 23) நள்ளிரவு 12 மணி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் மதுரையில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கு போடுவதால் ஓரளவு மட்டுமே பயன் தந்தாலும், தமிழகம் முழுவதும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, முழு ஊரடங்கு உள்ளிட்டவை பற்றி நாளை காலை 10 மணிக்கு காணொலி மூலமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இபிஎஸ் அவசர ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தின் முடிவில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE