இந்த மாற்றத்தை வரவேற்கிறோம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இந்த மாற்றத்தை வரவேற்கிறோம்!

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share

இந்த மாற்றத்தை வரவேற்கிறோம்!

-ம.அமுதவள்ளி, சின்னாளபட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சீனாவின் அத்துமீறல் குறித்து விவாதிக்க, பிரதமர், மோடி தலைமையில் நடந்த, அனைத்து கட்சி கூட்டத்தில், தி.மு.க., பதிவு செய்த கருத்துகள், பாராட்டத்தக்கது.தி.மு.க., சார்பில், வேறு பிரதிநிதியை அனுமதிக்காமல், அக்கட்சி தலைவரான, ஸ்டாலினே பங்கேற்றது வரவேற்கத்தக்கது. 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் நடந்த கூட்டத்தில், ஸ்டாலின் பேசுகையில், 'நேரு, இந்திரா, வாஜ்பாய் என, இந்நாட்டு பிரதமர்களின் கரத்தை, தி.மு.க., வலுப்படுத்தியுள்ளது. தற்போது, பிரதமர் மோடியை ஆதரிப்பதில், எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை.
'அன்னிய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து, தன் சுயமரியாதையையும், ஒவ்வொரு அங்குல நிலத்தையும், இந்தியா பாதுகாக்கும். இந்தியா அமைதியை விரும்புகிறது; தேவைப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கவும் தயங்காது.'இங்கே, பல்வேறு அரசியல் இயக்கங்கள், வெவ்வேறு கருத்துகளுடன் இருக்கலாம். நாட்டுப்பற்று என வந்தால், ஒரு தாய் பிள்ளைகளாக, நாம் ஒற்றுமையுடன் இணைவோம்' என, தெரிவித்துள்ளார்.நீண்ட காலத்திற்கு பின், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., சார்பில், முதிர்ச்சியான செயல்பாடு வெளிப்பட்டுள்ளது.அரசியல் சாராத நடுநிலையாளர்கள் மட்டுமன்றி, மாற்றுக் கட்சியினரும் கூட ஏற்கக் கூடிய வகையில், ஸ்டாலின் பேசியுள்ளார். கடந்த காலத்தில், கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடு காரணமாக, 'கோ பேக் மோடி' என, அவர் கூறியிருந்தாலும், தற்போது நாட்டுப்பற்றுமிக்க கோடிக்கணக்கான தமிழர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் கரத்தை வலுப்படுத்துவோம் என, பேசியுள்ளார்.
தி.மு.க., எப்போதுமே, தேசிய நீரோட்டத்திற்கு எதிரான கட்சி என்ற எண்ணத்திற்கு மாறாக, அக்கட்சிக்கும், தேசப்பற்று உண்டு என, நிரூபிக்கும் முயற்சியை, தற்போது முன்னெடுத்துள்ளது.அதே நேரம், தி.மு.க.,வின் அரசியல் நட்பு வட்டாரத்தில் இருக்கும், 'துக்கடா' கட்சிகளின் தலைமை பொறுப்பில் உள்ள ஒரு சிலர், சீனாவிற்கு ஆதரவாகவும், தாய்நாட்டிற்கு எதிராகவும் பேசும் போது, அதற்கு கண்டனம் தெரிவிக்கவும், ஸ்டாலின் முன்வர வேண்டும்.
தி.மு.க.,வில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம், மக்களிடம் நன்மதிப்பையே பெற்றுத் தரும். இது, ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

கருணைமதிப்பெண்வழங்குங்கள்!

கே.ஆர்.ராமானுஜம், காட்டுமன்னார்கோயில், கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' காலத்திலும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதில், தமிழக அரசு தீவிரம் காட்டியது. ஆனால், நீதிமன்றம் மற்றும் எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும், 'ஆல் பாஸ்' என, அரசு அறிவித்தது.அதேபோல, பிளஸ் 1 மாணவர்களும், 'ஆல் பாஸ்' என, அறிவிக்கப்பட்டது. தொற்று நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசின், இந்த முடிவு வரவேற்கத்தக்கதே.தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும், மன அழுத்தத்தில் இருந்தனர். அரசின் அறிவிப்பால், நிம்மதி அடைந்தனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கிய நேரம், கொரோனா பரவல் ஆரம்பக் கட்டத்தில் இருந்தது. ஆனால், அந்நோய் குறித்த பீதி, அதிகமாகவே இருந்தது. இதனால், பிளஸ் 2 மாணவ - மாணவியரும், பயத்திலும், மன அழுத்தத்திலுமே பொதுத் தேர்வை எழுதி முடித்தனர்.இந்தத் தேர்வை, மாநிலம் முழுதும், 7.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். கொரோனா காரணமாக, போக்குவரத்து வசதி குறைந்ததால், தேர்வின் கடைசி நாளான, மார்ச், 24ம் தேதி, பலர் தேர்வு எழுத முடியாமல் போனது. அவர்களுக்கு மறுதேர்வு நடத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது, குழப்பத்தை ஏற்படுத்தும்.மார்ச், 24ம் தேதி, பிளஸ் 2 மாணவர்கள் மன அழுத்தத்துடன் தேர்வு எழுதினர். வினாத்தாளும், கடினமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மறுதேர்வு நடத்தும்போது, வினாத்தாள் எளிமையாக இருந்தால், சர்ச்சையை ஏற்படுத்தும்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 போன்று, 'ஆல் பாஸ்' அறிவிக்காவிட்டாலும், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய, மாணவர்களுக்கு, தமிழக அரசு அவசியம் உதவி செய்ய வேண்டும். பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, 10 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இதனால் அவர்களின் எதிர்காலம், பாதிப்புக்கு உள்ளாகாது.

குழம்புவைக்கணுமே!

பி.தர்மலிங்கம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊரடங்கு காலத்தில், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஓட்டல், காய்கறி, மளிகை உட்பட, உணவு தொடர்பான அனைத்து விற்பனை கடைகளுக்கும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.வீடுகளில், அரிசி, காய்கறி இருந்தாலும், மிளகாய் துாள், மஞ்சள் துாள், அரிசி மாவு, கோதுமை மாவு போன்றவையும், அவசியம் தேவைப்படும். ஆனால், அவற்றை அரைத்துக் கொடுக்கும், 'மில்'களுக்கு, அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால், 'பாக்கெட்' துாள் வகையை, பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'அம்மா' உணவகம், ஓட்டல்களுக்கு, அரவை மில் சேவை அவசியம். எனவே, அத்தியாவசிய பட்டியலில், மாவு மில்களையும் இணைக்க வேண்டும்.அரசு அறிவித்துள்ள, முன்னெச்சரிக்கை நிபந்தனைகளை, மாவு மில் உரிமையாளர்கள், முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தலாம்.உணவு சேவையில் ஒன்றான, மாவு மில் இயங்க, தமிழக அரசு அனுமதி கொடுத்தால் தான், வீட்டில் குழம்பு வைக்க முடியும்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X