எச்1பி விசா நிறுத்தி வைப்பு: இந்திய மென்பொருள் நிபுணர்களுக்கு பாதிப்பு| Trump suspends visas allowing hundreds of thousands of foreigners to work in the US | Dinamalar

எச்1பி விசா நிறுத்தி வைப்பு: இந்திய மென்பொருள் நிபுணர்களுக்கு பாதிப்பு

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (12)
Share
எச்1பி விசா நிறுத்தி வைப்பு: இந்திய மென்பொருள் நிபுணர்களுக்கு பாதிப்பு, Trump, donald trump, suspends, visas, foreigners, work, US, united states

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்த ஆண்டு இறுதியில், அதிபர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் வேலை பார்க்க வழங்கப்படும்,
எச்1பி விசாவை, இந்தாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கும் உத்தரவில், அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதனால், அமெரிக்காவில் பணியாற்ற காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மென்பொருள் நிபுணர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவருக்கு, எச்1பி விசா வழங்கப் படுகிறது. குடியுரிமை இல்லாத இந்த விசாவையே, பெரும்பாலான அமெரிக்க மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

குறிப்பிட்ட துறையில் அதிக தொழில் நிபுணத்துவம் மற்றும் கல்வியறிவு உள்ளவர்களை ஈர்ப்பதற்காக, இந்த விசா பயன்படுத்தப்படுகிறது. இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள், இந்த விசா மூலம் அதிகம் பயன்பெற்று வந்தனர்.இதைத் தவிர, பல்வேறு வேலைக்கான விசாக்களும் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்த விசாக்களை, இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவில், அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, டொனால்டு டிரம்ப் கூறியதாவது:அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்பது நம்முடைய கோஷமாகும். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.


13.3 சதவீதம்தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளால், அதிக அளவிலான அமெரிக்கர்கள் ேவலையை இழந்துள்ளனர்.அமெரிக்க குடியுரிமைக்கான, 'கிரீன் கார்டை' குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வழங்குவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு, ஏப்ரல் மாதத்தில் பிறப்பிக்கப்பட்டது. அது இந்தாண்டு இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. வேலைக்கான விசாக்கள் வழங்குவதும், இந்தாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன்.வெளிநாட்டவர் அமெரிக்க சந்தையில் குவிவதால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை நாம் உணர வேண்டும். குறிப்பாக தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையில், உள்நாட்டில் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில், அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பிப்., - மே மாத காலகட்டத்தில், நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. மே மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை, 13.3 சதவீதமாக உள்ளது.நம் நாட்டின் பொருளாதாரத்தில், ஒவ்வொரு துறையிலும், வெளிநாட்டு தொழிலாளர்களுடன், அமெரிக்கர்கள் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து தற்காலிகமாக பணியாற்ற வந்துள்ள லட்சக்கணக்கானோருடன் போட்டியிட வேண்டியுள்ளது. இதைத் தவிர, இந்த தற்காலிக பணியாளர்களின் மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகளுடனும், போட்டியிட வேண்டியுள்ளது.


உத்தரவுதற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில், தற்காலிக வேலை திட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. அதன் மூலம், நம் பொருளாதாரத்துக்கு பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.எச்2பி விசா மூலம், தொழிலாளர்களை நியமிக்க அனுமதி கோரும் துறைகளில், கடந்த, நான்கு மாதங்களில், 1.7 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். அதேபோல், எச்1பி விசா உள்ளிட்ட விசா மூலம் ஊழியர்களை நியமிக்க அனுமதி கோரும் துறைகளில் மட்டும், இரண்டு கோடி அமெரிக்கர்கள் வேலையை இழந்து உள்ளனர்.
இந்த விசாக்கள் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை நியமித்தால், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.அதனால் தான், இந்த விசாக்கள் வழங்குவதை, இந்தாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.


விசா சீர்திருத்தம்: டிரம்ப் உத்தரவுவிசா முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துவக்கும்படி அதிகாரிகளுக்கு, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, வெள்ளை மாளிகை கூறியுள்ளதாவது:எச்1பி விசா முறையில் உள்ள ஓட்டைகளை அடைக்க, டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தகுதியின் அடிப்படையிலேயே, இந்த விசாவை வழங்குவதற்கான வழிமுறைகளை வகுக்க உத்தரவிட்டுள்ளார். 'உயர்திறன் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் அதே நேரத்தில், அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும் வகையில், விசா நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்' என, டிரம்ப் கூறியுள்ளார்.அதிக சம்பளம் மற்றும் உயர்திறன் தேவைப்படும் பணிகளில் மட்டும், வெளிநாடுகளைச் சேர்ந்த திறமையானவர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் விசா வழங்கப்பட வேண்டும். ஆண்டுக்கு, 85 ஆயிரம் எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கு, 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர்.

தற்போது, குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதை மாற்றி, விண்ணப்பிப்போரின் தகுதிக்கேற்ப மதிப்பெண் அடிப்படையில், விசா வழங்குவது குறித்து ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது.அதே நேரத்தில், சில பணிகளில், குறைந்த ஊதியத்துக்கு வெளிநாட்டவர் வருவதால், அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகிறது. இதுபோன்ற பிரச்னைகளை கண்டுபிடித்து, விசா வழங்கும் நடைமுறையில் முழு சீர்திருத்தம் செய்ய, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு வெள்ளை மாளிகை கூறியுள்ளது.


'நாஸ்காம்' கண்டனம்விசாவை நிறுத்தி வைக்கும் உத்தரவுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. எச்1பி விசாவை, இந்திய கம்ப்யூட்டர் துறை நிபுணர்களே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். டிரம்பின் உத்தரவு குறித்து, 'நாஸ்காம்' எனப்படும், சாப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்காவில், அக்., 1ம் தேதி புதிய நிதியாண்டு துவங்குகிறது. இதற்காக, பல அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு, எச்1பி விசா வழங்கப்பட்டுள்ளது. தற்போது அது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவால், அமெரிக்க பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். தேவையான தொழில்நுட்ப நிபுணர்கள் இல்லாத நிலையில், பல்வேறு சேவைகள், வெளிநாடுகளில் இருந்தே செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். தவறான வழிகாட்டுதலால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


சுந்தர் பிச்சை நிறுவனங்கள் எதிர்ப்புவிசா நிறுத்தி வைப்பு அறிவிப்புக்கு, 'கூகுள்' நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.சுந்தர் பிச்சை கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்பே, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம். உலகின் தலைச் சிறந்த தொழில்நுட்ப மையமாக அமெரிக்கா விளங்குவதற்கும் அதுவே காரணம். கூகுள் நிறுவனம் இன்று, இந்த நிலைக்கு எட்டியுள்ளதற்கு காரணம், வெளிநாட்டு ஊழியர்களே. அரசின் உத்தரவால் அதிருப்தி அடைந்துள்ளேன். இந்த நேரத்தில், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், பல்வேறு கட்சிகளின், எம்.பி.,க்கள் உள்ளிட்டோரும், டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X