லடாக்கில் படைகளை விலக்க முடிவு?இருதரப்பு பேச்சில் உடன்பாடு | India, China decides to withdraw forces after military commanders meet | Dinamalar

பொது செய்தி

இந்தியா

லடாக்கில் படைகளை விலக்க முடிவு?இருதரப்பு பேச்சில் உடன்பாடு

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (13)
Share
லடாக்,படைகளை விலக்க முடிவு?இருதரப்பு பேச்சு உடன்பாடு, India, China, withdraw, military forces, military commanders, meet, border clash, ladakh

புதுடில்லி : இந்திய - சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சில், லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்வது என, இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய - சீன எல்லையில், காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில், இங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதிலடி தாக்குதலில், சீன வீரர்கள், 40 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதனால், எல்லையில் இரு நாடுகளுமே படைகளையும், ஆயுதங்களையும் குவித்ததால் பதற்றம் நிலவியது. இதற்கிடையே, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சு நடந்தது. இந்தப் பேச்சு, பல சுற்றுக்களாக நேற்றும் தொடர்ந்தது. இந்திய தரப்புக்கு, லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கும், சீன தரப்பில், திபெத் ராணுவ பிராந்திய கட்டுப்பாட்டு அதிகாரி மேஜர் ஜெனரல் லியு லின்னும், தலைமை வகித்தனர்.
இந்த பேச்சு, 11 மணி நேரம் நீடித்தது. இதில், இரு தரப்புக்கும் இடையே சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

இந்திய வீரர்கள் மீது, சீன ராணுவம் முன் கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக, நேற்று நடந்த பேச்சின் போது, நம் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கிழக்கு லடாக் பகுதியில், எல்லையில் உள்ள சீன வீரர்களை உடனடியாக வாபஸ் வாங்கும்படியும் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்திய - சீன எல்லையில், 3,500 கி.மீ., பகுதியில், இரு தரப்புமே வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, லடாக்கில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்து, இரு தரப்புமே படைகளை விலக்குவது என, உடன்பாடு ஏற்பட்டது. படைகளை எவ்வாறு விலக்குவது என்பதற்கான நடைமுறைகளை விரைவில் விவாதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு, சாதகமாகவும், ஆரோக்கிய மானதாகவும், அமைதியான சூழலை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.துன்பத்தில் சந்தோஷம் அடைவதா?இந்திய ராணுவத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான அறிக்கைகளை தினமும் வெளியிடுவதே, காங்கிரஸ் தலைவர்களுக்கு வேலையாக உள்ளது. நாடு, துன்பத்தில் இருக்கும்போது கூட சந்தோஷத்தை தேடும் மனப்போக்கு, அவர்களிடம் உள்ளது. சீன எல்லை பிரச்னை, கொரோனா பரவல் என, எல்லாவற்றையுமே, காங்., கட்சியினர் அரசியலாக்குகின்றனர்.
சம்பித் பத்ரா, செய்தி தொடர்பாளர், பா.ஜ.,


'சீன வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை'இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது:இரு நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்த விஷயத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, இரு தரப்பும் உறுதி அளித்துள்ளன. தற்போது இதை மட்டுமே கூற விரும்புகிறேன். இரு தரப்பு பேச்சில், படைகளை விலக்குவது பற்றி முடிவு எடுக்கப்பட்டதா என்பது பற்றி தற்போது தெரிவிக்க முடியாது. துாதரக மற்றும் ராணுவ அதிகாரிகள் அளவில் தொடர்ந்து பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்வான் பகுதியில் நடந்த மோதலின் போது, சீன வீரர்கள், 40 பேர் உயிரிழந்ததாக தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஊடகங்களில் தான் இதுபோன்ற செய்திகள் வெளியாகின்றன.
இந்த மோதலில் சீன வீரர்கள் யாரும் இறக்கவில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


சீன துாதரகத்தில் போராட்டம்டில்லியில் உள்ள சீன துாதரக அலுவலகம் முன், ஹிந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, துாதரக பெயர் பலகையில், கறுப்பு போஸ்டர்களை ஒட்டி, சீனாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.சீன துாதரக பெயர் பலகையின் மீது, 'சீனா ஒரு துரோகி' என, எழுதப்பட்ட போஸ்டரை ஒட்டியதாக, போராட்டக்காரர் கள் தெரிவித்தனர்.
ஆனால், இது குறித்து தங்களுக்கு எந்தவிதமான புகாரும் வரவில்லை என்று, தெரிவித்த டில்லி போலீசார், அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X