பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு சான்றிதழ்: அரசின் தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு சான்றிதழ்: அரசின் தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஜூன் 23, 2020
Share

சென்னை; பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திண்டிவனத்தை சேர்ந்த வழக்கறிஞரும், ரெட்டி நல சங்க நிர்வாகியுமான, கிருபாகரன் தாக்கல் செய்த மனு:பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத ஒதுக்கீடு வழங்க, சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அரசியல் சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இடஒதுக்கீடு சலுகை கோருபவர்கள், தாசில்தார் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியிடம் இருந்து, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் பெற வேண்டும். உரிய விபரங்களை சரிபார்த்து, அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும். எங்கள் சமூகத்தை சேர்ந்த பலரின் பொருளாதாரம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது.இந்நிலையில், அனைத்து கலெக்டர்களுக்கும், வருவாய் நிர்வாகத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், 'பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் அளிக்க வேண்டாம்' எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை, சட்டவிரோதமானது.அரசியல் உள்நோக்கத்துடன், இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இடஒதுக்கீட்டு பலன்களை, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பெறுவதை தடுக்கும் நோக்கில், சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்; வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும், 30க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X