திருநெல்வேலி :போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று வணிகர்கள் கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்தியவர் ஜெயராஜ் 63; மகன் பென்னிக்ஸ் 31 அதே பகுதியில் அலைபேசி கடை நடத்தினார். 19ம் தேதி இரவு 9:00 மணியளவில் போலீசார் முருகன், முத்துராஜ் ரோந்து வந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்ததால் கடைகளை அடைக்கும்படி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரிடம் கூறினர்; இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஜாமினில் வெளிவர முடியாதது உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தந்தை மகனை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். பின் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு பென்னிக்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். படுகாயங்களுடன் இருந்த ஜெயராஜும் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு இறந்தார். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இறந்தவர்கள் உடல்களில் காயங்கள் உள்ளதா என்பதை கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆய்வு செய்தார்.
தொடர் போராட்டம்
இச்சம்பவத்தை கண்டித்து சாத்தான்குளத்தில் நேற்று காமராஜ் சிலை முன் பொது மக்கள் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்துார் தி.மு.க. - எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் பங்கேற்றார். நேற்று மாலை வரை போராட்டம் தொடர்ந்தது.'விசாரணைக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கிய எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் இருவருக்கு வேலை வழங்க வேண்டும்; நிவாரணம் வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். கோவில்பட்டியிலும்மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

'சஸ்பெண்ட்'
எஸ்.ஐ.க்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. அருண் பாலகோபாலன் உத்தரவிட்டார். பின் இருவரையும் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சந்தீப் நந்துாரி உத்தரவிட்டதுடன் சாத்தான்குளம் போலீஸ் நிலைய போலீசாரை கூண்டோடு மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.
இன்று கடையடைப்பு
தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியதாவது: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கடையை மூடவில்லை என்பதற்காக பென்னிக்சையும் அவரின் தந்தை ஜெயராஜையும் போலீசார் கைது செய்து தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழப்பிற்கு காரணமான போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இருவர் உயிரிழப்பையும் கண்டித்து 24ம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு 2 கோடி ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா டி.ஜி.பி.,யிடம் அளித்துள்ள மனு:'கொடூரமான கொலைக்கு முதல்வரும், டி.ஜி.பி.,யும் வியாபாரிகளுக்கு நீதி வழங்க வேண்டும். ஒரே ஆண்மகன் குடும்பத்தில் இருந்த நிலையில் அவரும் கொல்லப்பட்ட நிலையில் 3 பெண்கள் உள்ள குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.இவ்விவகாரம் தொடர் பாக நீதிமன்றம் தானாக முன்வந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் தரப்பில் மனுதாக்கல் செய்யப் பட்டுள்ளது. நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.
விசாரணை நடத்த ஆணையம் உத்தரவு
மாநில மனித உரிமை ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: தந்தை, மகன் இறந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலர், சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் விரிவான அறிக்கையை நான்கு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனித உரிமைகள் ஆணைய டி.ஜி.பி. சம்பவம் நடந்த காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பவம் நடந்த தேதியில் காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆணையத்தில் எட்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கும்படி தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்ய உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெயராஜ் மனைவி செல்வராணி தாக்கல் செய்த மனுவில், 'இருவர் உடலையும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மற்றும் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என குறிப்பிட்டிருந்தார். அவசர வழக்காக விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, 'திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டார்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
முதல்வர் பதிலளிக்க வேண்டும்
சாத்தான்குளத்தில் காவல்துறை அழைத்து சென்ற ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவருமே இறந்துவிட்டார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா. உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பதிலளிக்க வேண்டும்; உரிய நீதியும் வேண்டும். கொரோனா நெருக்கடியில் வாய்த்தகராறால் தந்தை-மகன் உயிர்களை பறிக்கும் காவல்துறை நடந்து கொள்கிறது என்றால், இது திரைமறைவு போலீஸ் ஆட்சியா.ஸ்டாலின், தலைவர், தி.மு.க.,
இழப்பீடு வழங்க வேண்டும்
காவல்துறையினர் தாக்கியதால் தான் இருவரும் பலியாகியிருப்பதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.டி.டி.வி.தினகரன், பொதுச்செயலாளர், அ.ம.மு.க.,
கடுமையாக தண்டிக்க வேண்டும்
போலீசை எதிர்த்து பேசியதற்காக இந்த படுகொலை.கொரோனாவால் சாகக்கூடாதென கடையை மூட சொன்னவர்கள் இந்த இரட்டைக்கொலையை செய்துள்ளனர். காவல்வதை, இரட்டைக்கொலை தொடர்புடைய காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனே சிறைப்படுத்த வேண்டும். பணியிடைநீக்கம் செய்யவேண்டும்.பிணையில் விடாமலேயே வழக்கை விரைந்து நடத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்.தொல்.திருமாவளவன்நிறுவன தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
நீதி வேண்டும்
தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உயிரிழப்புக்கு உரிய நீதி வேண்டும். இவர்களின் இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு போக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரத்குமார்நிறுவனர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி.
மன்னிக்க கூடாத குற்றம்
உயிரிழப்புகளை தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்க கூடாத குற்றம்.கமல், தலைவர், மக்கள் நீதி மய்யம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE