திரையிசையின் கம்பர் கண்ணதாசன்

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 திரையிசையின் கம்பர் கண்ணதாசன்

காவியத் தாயின் மூத்த மகன் கம்பன் என்றால், இளைய மகன், காலத்தை வென்றவன், காவியம் ஆனவன் கண்ணதாசன் எனலாம். 'தாடி இல்லாத தாகூர்; மீசை
இல்லாத பாரதி' என்று கண்ணதாசனைப் பாராட்டுவார் கவிஞர் வாலி. திரையுலகில் க.மு., க.பி. என்றால் 'கண்ணதாசனுக்கு முன்', 'கண்ணதாசனுக்கு பின்' என்று பொருள். கண்ணதாசன் கல்லுாரிக்கோ பல்கலைக்கழகத்திற்கோ சென்று படித்ததில்லை. எனினும் அவர் சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியங்கள் வரை, சித்தர் பாடல்கள் முதல் சிற்றிலக்கி
யங்கள் வரை கற்று அறிந்தவர்; அதனால் அவருடைய திரையிசைப் பாடல்களில் இலக்கியங்களின் தாக்கம் இருக்கும். கவிச்சக்கரவர்த்தி கம்பன் கவிதைகளின் தாக்கம் கண்ணதாசனின்
திரையிசைப் பாடல்களில் அதிகம் இடம்பெற்றுள்ளன.


கைவண்ணம்ராமனும் இலக்குவனும் விசுவாமித்திரரோடு மிதிலைக்குச் செல்லும்போது, ராமனது திருவடித் துகள்பட்டுத் தனது சாபம் நீங்கி முன்னைய பெண் வடிவத்தைப் பெறுகிறாள் அகலிகை. அப்பொழுது அகலிகையின் வரலாற்றை எடுத்துரைத்த விசுவாமித்திரர். 'மேகம் போன்ற கரிய திருமேனியுடைய ராமனே! வருகிற வழியில் வனத்தில் அஞ்சனம் போலும் கரிய நிறத்தையுடைய தாடகை என்னும் அரக்கியோடு செய்த போரில் உன் கையின் திறத்தை வில்லின் ஆற்றலை பார்த்தேன்; இங்கு உன் திருவடியின் திறத்தைக் கண்டேன்' என்று கூறுகிறார்.
'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி, மற்றுஓர் துயர்வண்ணம் உறுவது உண்டோ? மைவண்ணத்து அரக்கி போரில், மழைவண்ணத்து அண்ணலே உன் கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்கு கண்டேன்'
கம்பனின் இப்பாடல் கண்ணதாசனை ஈர்த்தது. அதன் விளைவாக உருவானதுதான் 'பாசம்' என்னும் திரைப்படத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவியும் இணைந்து பாடுவதாக அமைந்த புகழ்பெற்ற இப்பாடல்...
ஆண்:பால்வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணன் நான் கண்டுவாடுகிறேன்!
பெண்:கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டுவாடுகிறேன்!
கம்பர் பயன்படுத்திய 'வண்ணம்'என்னும் சொல்லே
மீண்டும் மீண்டும் வர, இத்திரைப்படப் பாடலைப் புனைந்துள்ளார் கண்ணதாசன்.


தோள் கண்டார்தேர் ஏறி வீதி உலா வரும் ராமனைக் கண்டு மகிழ மிதிலை நகரத்து மகளிர் மொய்க்கின்றனர். ராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள், அவ்வழகை முற்றும் கண்டு களித்து முடியாமையால் அத்தோள் அழகினையே கண்ட வண்ணம் இருந்தார்களாம். வாள் போன்ற கண்களையுடைய மிதிலை நகரப் பெண்டிருள் ராமனது திருமேனியழகினை
முழுவதும் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லையாம்.
'தோள் கண்டார், தோளே கண்டார்; தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அதே வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்'
இப்பாடலின் தாக்கம்தான்
'இதயக் கமலம்'படத்தில்
'தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில்இரு கிளிகள் கண்டேன்;
வாள் கண்டேன் வாளே கண்டேன்.
வட்டமிடும் விழிகள் கண்டேன்'
என்று கண்ணதாசன் பாட
துாண்டுகோலாக அமைந்தது.

நதியின் குற்றமல்ல

ராமனிடம் மன்னனாகிய தசரனது ஆணையை கைகேயி கூறிய அளவில், கானகம் செல்லப் புறப்பட்டு விடையும் பெற்று விடுகிறான் ராமன். ராமன் காடு செல்வது கேட்ட நாட்டு மக்கள் துயரம் அடைகிறார்கள். இலக்குவன் போர்க்கோலம் பூணுகிறான். இதையறிந்த ராமன், இலக்குவன் இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்து அவனது சீற்றத்தைத் தணிக்க முற்படுகிறான்.
'மழைநீர் வரத்து இன்மையால் சில காலம் ஆற்றில் நீர் வற்றுவது ஆற்றின் குற்றம் அன்று; அதுபோல என்னைக் காடு செல்லும்படி சொன்னது தந்தையின் குற்றம் அன்று; காடு செல்லும்படி வரம் வாங்கியது, பெற்று நம்மைக் காப்பாற்றி வளர்த்தவள் ஆகிய கைகேயியின் அறிவினது குற்றமும் அன்று; நமது ஊழ்வினையால் விளைந்த குற்றமே ஆகும். இதனை ஆராயாது, நீ இந்தச் செயலுக்கு இவர்களைக் காரணமாக்கிக் கோபித்தது ஏன்?'
என்று வினவுகிறான் ராமன்.'நதியின் பிழைஅன்று நறும்புனல் இன்மை; அற்றே பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்மதியின் பிழை அன்று; மகன் பிழை
அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.
கம்பரின் இப்பாடற் கருத்தினை கண்ணதாசன் 'தியாகம்' என்னும் படத்தில் எடுத்தாண்டுள்ளார். கதைத் தலைவன் 'தன்மீது சுமத்தப்பட்ட பழிக்குத் தான் காரணம் இல்லை; விதிதான் காரணம்' என்று கூறுவதாக வரும் அப்பாடல்...
'நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி, ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா!....... நதிவெள்ளம் காய்ந்து விட்டால்நதி செய்த குற்றமில்லை;விதி செய்த குற்றம் அன்றி
வேறே யாரம்மா?'


வசந்த மாளிகைகடலைத் தாவி இலங்கைக்குச் சென்ற அனுமன், அசோக வனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான்; எப்படியாவது சீதையைச் சிறையிலிருந்து விடுவிக்க எண்ணுகிறான். 'தாயே! தாங்கள் என் தோளில் அமர்ந்து கொள்ளுங்கள், தங்களை யான் ராமன்பால் சேர்ப்பிப்பேன்' என்று சீதையிடம் விண்ணப்பிக்கிறான். அது கேட்ட சீதை, அது பொருத்தமற்ற செயல் என்று விளக்கிக் கூறி அதற்கு உடன்படாது மறுக்கிறாள். பிராட்டியின் வார்த்தைகளைக் கேட்டுத் தெளிந்த அனுமன் தன் கருத்தை விலக்கிக் கொண்டு, 'ராமபிரானுக்கு யான் கூற வேண்டிய செய்தி யாது? கூறுக' என்று கேட்கிறான். சீதை, 'அண்ணல்பால் நினைவுறுத்துக' என்று தனித்திருந்த போது இருவரும் பேசிப் பகிர்ந்து கொண்ட சில அடையாள மொழிகளைக் கூறுகிறாள். அவற்றுள் ஒன்று, ராமன் மிதிலையை அடைந்து, தன்னைத் திருமணம் செய்து கொண்ட காலத்தில், 'இந்தப் பிறவியலில் இரண்டாவது பெண்ணை மனத்தால் கூடத் தீண்ட மாட்டேன்' என்று கூறிய செவ்வரத்தை அண்ணலின் செவியில் சாற்றுக'என்பது. ராமன் சீதைக்கு அளித்த செவ்விய வரத்தினை, திருவார்த்தையை, ஒரு திரைப்பாடலில் நயமாகப் பொதிந்து வைத்துள்ளார் கண்ணதாசன். 'வசந்த மாளிகை' திரைப்பட பாடலில், 'மயக்கமென்ன இந்த மவுனமென்ன மணி மாளிகை தான் கண்ணே; தயக்கமென்ன இந்தச் சலனமென்ன அன்புக் காணிக்கைதான் கண்ணே' என்று காதலிக்குத் தான் கட்டி வைத்திருக்கும் மாளிகையைக் காட்டிக் கூறும் காதலன்,
'உன்னையல்லால் ஒரு பெண்ணை இனிநான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன்!'
என்று உறுதி கூற,'
உன் உள்ளம் இருப்பது என்னிடமே
- அதைஉயிர் போனாலும் தர மாட்டேன்!'
என்று காதலியும் நெகிழ்ந்து கூறுவதாகப் பாடுகிறார் கண்ணதாசன்.


லட்சுமி கல்யாணம்கம்ப ராமாயணத்தில் கூறப்படும் ராமனின் அவதாரச் சிறப்பு முழுவதையுமே 'லட்சுமி கல்யாணம்' என்னும் திரைப்படத்திற்காக எழுதிய பாடலில் ரத்தினச் சுருக்கமான மொழியில் எடுத்துக்காட்டியுள்ளார் கண்ணதாசன்.
'ராமன் எத்தனை ராமனடி அவன்நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன் ராமன் எத்தனை ராமனடி!
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாணராமன் காதலுக்குத் தெய்வம் அந்தச் சீதாராமன்,
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்'என்று நீள்கிறது அந்த பாடல். இப்படி கம்பனின் கவித்திறம் கவியரசர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் எங்கும் நீக்கமறப் படிந்து அவற்றிற்குத் தனி வண்ணமும் வனப்பும், கூடுதல் வளமும், வலிமையும் சேர்த்திருக்கிறது.-முனைவர் நிர்மலா மோகன்எழுத்தாளர், மதுரை94434 58286

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinath - london,யுனைடெட் கிங்டம்
24-ஜூன்-202021:50:36 IST Report Abuse
Gopinath இன்று கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள். காலத்தின் கண்ணாடி சிதறமால் எழுதுவான். சிதறினாலும் முகம் தெரியும் அவன் எழுத்தில் நம் முகம் காணலாம் கம்பன் காலத்தில் பிறந்திருந்தால் இவனும் காவியம் படைத்திருப்பான் வள்ளுவன் காலத்தில் பிறந்திருந்தால் இன்னொரு வள்ளுவம் பிறந்திருக்கும் கதையால் கலை வடித்தான் சிலை வடித்தான், நவரசம், நயனம், லயனம் சொன்னான் அவ்வை இருந்திருந்தால் இவனுக்கும் ஒரு நெல்லிக்கனி கொடுத்திருப்பாள். இன்பத்தில் திளைத்தாலும் இறை பக்தி எழுதினான் குருக்ஷேத்திரம் எழுதினான் பார்த்தனுக்கு பாடம் படித்தான் ஐய்யாதுரையிடம் கற்றிலக்கியம் அனைவருக்கும் பகிர்ந்தளித்தான் காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை..நம்மையும் கண்ணாடி சிதறலாம் கண்ணதாசன் சிதறமாட்டான் - இவன் கோபிநாதன்
Rate this:
Cancel
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
24-ஜூன்-202013:37:33 IST Report Abuse
SANKARAN NAGARAJAN கண்ணதாசனின் எல்லா பாடல்களும் எதோ ஒரு விதத்தில் மக்களின் மனதை தொட்டு மகிழ்ச்சி, பாரம், தெளிவு, சிந்தனை, தீர்வு உள்ளதாகத்தான் அமைந்து உள்ளது. அவரின் பாடல்களுக்கு உயிர் கொடுத்ததில் பலருக்கு பங்கு உண்டு. இப்பொது வரும் பாடல்கள் எல்லாம் ஒரு சிலதை தவிர பொழுது போக்குகின்ற பாடல்கள்தான், மனதில் நிற்கக்கூடியவை எதுவும் இல்லை. எத்தனை வருடம் கழித்து அவரின் பாடல்கள் கேட்டாலும் மனதை மிக உற்சாகமாக வைக்கும். ஆண்டவன் அவரை விரைவில் அழைத்து கொண்டான்.
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
24-ஜூன்-202010:10:06 IST Report Abuse
G.Prabakaran கவிஞர் கண்ணதாசன் ஒரு சகாப்தம் இவரை போன்ற கவிஞர்கள் இனி தோன்றுவது அரிதிலும் அரிது. அவருடைய பிறந்தநாளில் அவரின் ஆசி வேண்டி வணங்கும் தங்கள் தீவிர ரசிகன் கோ.பிரபாகரன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X